கொழும்பு:
இலங்கையிலுள்ள அனைத்து மெக்டோனல்ட்ஸ் உணவகக் கிளைகளும் மார்ச் 24 முதல் மூடப்பட்டன.
உணவகத்தின் 12 கிளைகளும் ஏப்ரல் 4ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும் என்று கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், அபான்ஸ் நிறுவனத்தின் பங்காளர் என்ற பொறுப்பிலிருந்தும் மெக்டோனல்ட்ஸ் விலகிக்கொண்டது.
அபான்ஸ் நிறுவனம் இலங்கையில் அதன் அனைத்துலக சுகாதாரத் தரத்தைக் கட்டிக்காக்கத் தவறியதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து மெக்டோனல்ட்ஸ் நிறுவனமும் அதை இலங்கையில் நடத்தும் அபான்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று மெக்டோனல்ட்ஸ் கிளைகளுக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புகளில் மூடல் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மீண்டும் திறப்பது குறித்து தகவல் ஏதும் இடம்பெறவில்லை.
இலங்கையில் 1998ஆம் ஆண்டிலிருந்து மெக்டோனல்ட்ஸ் இயங்கி வருகிறது.