இந்திய வணிகர்கள் உயர்வுக்கு புதிய கட்டமைப்பு! கடனுதவிகளை இரட்டிப்பாக்கும் முயற்சியில் டத்தோ ரமணன் தீவிரம்

 இந்திய தொழில்முனைவோர் உயர்வுக்கு வழிவகுக்கும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் படலத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் தீவிரம் காட்டி வருகிறார்.

தமது அமைச்சின் கண்காணிப்பில் உள்ள அரசு சார்புடைய (ஜி.எல்.சி) நிதி நிறுவனங்கள் வழி, இந்திய தொழில்முனைவோர்களின் மேம்பாட்டுக்குத் தேவையான நிதி வளங்களை இரட்டிப்பாக்கும் சாத்தியங்களை அவர் ஆராய்ந்து வருகிறார்.

தற்போது தெக்குன் நிதி நிறுவனத்தின் கீழ், இந்திய வணிகர்களுக்கு உதவுவதற்காக வெ.30 மில்லியன் கடனுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஸ்புமி (SPUMI) எனும் தனிப்பிரிவின் வழி, இந்திய வணிகர்களுக்கு இந்த கடனுதவி பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இதன் வழி கிட்டத்தட்ட 1,600 இந்திய வணிகர்கள் பயன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு அரசு பட்ஜெட்டில், வெ.30 மில்லியன் மட்டுமே ‘ஸ்புமி’-க்கு ஒதுக்கப்பட்ட போதிலும், தெக்குன் வெ.11.6 மில்லியன் உள்நிதியைப் பயன்படுத்தவுள்ளதால், இந்திய வணிகர்களுக்காக இப்போது இருக்கின்ற மொத்த ‘ஸ்புமி’ நிதி, வெ.41.6 மில்லியன் ஆகும் என அண்மையில் டத்தோ ரமணன் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஸ்புமி’ பிரிவின் வழி, இதுவரை 28,000க்கும் மேற்பட்ட இந்திய வணிகர்களுக்கு வெ.442.6 மில்லியன் கடனுதவி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நீரோடையிலிருந்து இந்தியர்கள் பின்தள்ளபபட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்ற டத்தோ ரமணன்,தாம் பொறுப்பு வகிக்கும் காலத்தில் இன்னும் அதிகமான இந்திய தொழில்முனைவர்களை கைதூக்கி விட வேண்டும் என கங்கணம் கட்டி வருகிறார்; அதற்கான உள்கட்டமைப்பு வேலைகளில் மும்முறம் காட்டி வருகிறார்.

தெக்குன் மட்டுமல்லாது, தமது அமைச்சின் கண்காணிப்பிலுள்ள பேங்க் ராக்யாட், எஸ்.எம்.இ. கார்ப்பரேஷன், எஸ்.எம்.இ. பேங்க், அமனா இக்தியார் மலேசியா, கூட்டுறவு ஆணையம் போன்ற நிதி நிறுவனங்கள் வழி, இன்னும் அதிகமான இந்திய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், இன்னும் அதிகமான கடனுதவிகளை ஒதுக்கீடு செய்யவும் டத்தோ ரமணன் முயன்று வருகிறார்.

இதற்கிடையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிமுகப்படுத்திய மடானி பொருளாதார கட்டமைப்பும், குறு – சிறு – நடுத்தர தொழில் துறையின் தரத்தை உயர்த்த தமது அமைச்சு கொண்டுள்ள இலக்கை எட்டுவதற்கு நிச்சயமாகக் கைகொடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘மடானி தொழில்முனைவோர், பொருளாதாரத்தை இயக்குதல்’ என்ற கருப்பொருளுடன் ‘KUSKOP 2024’ எனும் வியூக திட்டமிடல் ஆவணத்தை தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வியூக திட்டமிடலைச் செயல்படுத்துவதன் வழி, மலேசியாவை 30ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருமாற்றும் இலக்கை அடைய முடியும் என டத்தோ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

5 வியூகங்களை உள்ளடக்கி, 22 உத்திகள், 205 திட்டங்களை கோடிட்டுக் காட்டும் இந்த ‘KUSKOP 2024’ திட்டமிடல் ஆவணத்தின் மூலம், கிட்டத்தட்ட 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டத்தோ ரமணனின் தீவிர முயற்சியினால், அணை திரண்டு வருகின்ற வாய்ப்புகளை எட்டிப் பிடித்து, வெற்றிப் படிகள் ஏறி இலக்கை அடைய இந்திய மக்கள் தயாராக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here