“அங்கிள் ஜி”.. கல்யாண வீட்டு மூலைகளில் அமர்ந்து புலம்புவார்.. குஜராத்தில் வறுத்தெடுத்த பிரியங்கா!

காந்திநகர்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, “கல்யாண வீடுகளில் ஒரு அங்கிள் ஜி இருப்பார்..” எனக் கூறி பிரதமர் மோடியின் பேச்சுகளை விமர்சித்துள்ளார்.

18ஆவது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

முதல்கட்ட வாக்குப்பதிவில் 102 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 88 தொகுதிகளிலும் என மொத்தம் இதுவரை 190 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில் மீதும் உள்ள தொகுதிகளுக்கு மே 7, மே 13, மே 20, மே 26, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தாத்ரா, நாகர் மற்றும் ஹாவேலி, தாமன் மற்றும் டையூ என 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் குஜராத்தில்தான் அதிகபட்ச தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசி வருகிறார்.

குறிப்பாக, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அது மக்களின் சொத்துகளை, ஊடுருவல் காரர்களுக்கு பகிர்ந்தளித்துவிடும் என்றும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சியினர் மீதும் கடும் புகார்களை கூறி வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து மோடி பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வால்சத் மாவட்டத்தின் தரம்பூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், “திருமணங்களின் போது ஒரு மூலையில் முட்டாள்தனமாக பேசும் அங்கிள் ஜி ஒருவர் இருப்பார். அப்படிப்பட்ட அங்கிள் ஜி, “ஜாக்கிரதையாக இரு” என ஆரம்பிப்பார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உங்களிடம் இருக்கும் தங்க நகைகள், தாலியை பறித்து வேறு ஒருவரிடம் கொடுத்து விடுவார்கள் என்று கூறுவார். இதையெல்லாம் கேட்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? சிரிப்பீர்கள்.

எனது குடும்பத்தில் இருந்து மட்டுமல்ல, பல்வேறு பிரதமர்களை நான் பார்த்துள்ளேன். அதில் இந்திரா காந்தியும் ஒருவர். அவர் இந்த நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தவர். எனது தந்தை ராஜீவ் காந்தியும் பிரதமராக இருந்தார். அவரை நான் வீட்டிற்கு துண்டு துண்டாக கொண்டு வந்தேன். அவர் தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தவர்.

மன்மோகன் சிங் இந்த நாட்டில் ஒரு புரட்சியை கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சியில் இல்லாவிட்டாலும் அடல் பிஹாரி வாஜ்பாய் குறைந்தபட்சம் நாகரீகமானவர் என்று கூறலாம். முதல்முறையாக பொதுவெளியில் பொய் சொல்லும் பிரதமர் ஒருவர் இருக்கிறார். நாட்டின் பிரதமர் முட்டாள்தனமாக பேசுகிறார். ஏனென்றால் தான் வகிக்கும் பதவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் மக்கள் தனது வார்த்தைகளை சீரியசாக எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறார்  எனச் சாடினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here