ஆறாண்டு கிடப்பில் இந்தியர் பெருந்திட்டம்! உள்ளதையும் இழந்து நிற்கும் பெருந்துயரம்

ஈராண்டுகள் பட்டிதொட்டி எங்கும் பயணித்து மேற்கொள்ளப்பட்ட அணுக்கமான ஆய்வின் வழி உருவாக்கப்பட்ட மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (Malaysian Indian Blueprint – MIB), ஆறாண்டுகள் மீளாத் துயில் கொண்டிருக்கிறது. 2018ஆம் ஆண்டில் திட்டமிட்டப்படி இப்பெருந்திட்டம் அமலாக்கத்திற்கு வந்திருந்தால், இன்னமும் நம் சமூகம் பிழைப்புக்காகவும் வாய்ப்புக்காகவும் கையேந்தி நிற்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்குமா என எண்ணத் தோன்றுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டில் அப்போதைய ‘ஒரே மலேசியா’ பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அப்பெருந்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். மறு ஆண்டான 2018இல், நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் துறையின் கீழ் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டு, அதன் முழு கண்காணிப்பில் இந்தியர் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சியும் காட்சியும் மாற, இந்தியர் பெருந்திட்டம் அடங்கிய புத்தகமும் அட்டைப் பெட்டிக்குள் முடங்கிட, இந்திய விவகாரத் துறையோ அங்கும் இங்கும் பந்தாடப் பட, சிறுபான்மையினரான நமது கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றது.

முன்பிருந்த இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவை குழு (CCIC) இப்போது இல்லை. மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களைக் களைய உருவாக்கப்பட்டிருந்த ‘எஸ்.ஐ.டி.எஃப்’ (SITF) எனப்படும் சிறப்பு செயலாக்கப் பணித்திட்டக் குழு இப்போது இல்லை.

முன்பிருந்த தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவுக்குழு ‘பி.டி.எஸ்.டி.’ (PTST) இப்போது இல்லை. முன்பிருந்த இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டுத் திட்ட சிறப்புச் செயலகமான ‘சீட்’ (SEED) பிரிவும் இப்போது இல்லை! அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கக்கூடிய தமிழ் பேசும் அமைச்சரும் இப்போது இல்லை என்பது, எவ்வளவு பெரிய இழப்பு?

உள்ளதையும் இழந்து நிற்கும் பரிதாபத்திற்குரிய இந்திய சமுதாயம் அறிந்தும் அறியாததுபோல் இருக்கிறதா? துன் சாமிவேலு போல் இரும்புக்கரம் கொண்ட ஒரு தானைத் தலைவர் இல்லாத வெற்றிடத்தை கண்டு திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறதா? 2018ஆம் ஆண்டு துவங்கப்படும் மலேசிய இந்தியர் பெருந்திட்டதிற்கு, தேவைக்கேற்ப அதிகாரம், மனித வளம், பொருள் வளம் வழங்கப்படும் என டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எழுத்துப் பூர்வமாக கையொப்பமிட்டு வாக்குறுதி அளித்திருந்தார்.

இப்பெருந்திட்ட இலக்குகளின் அடைவுகள் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் வெளியிடப்படும். கடந்த சில ஆண்டுகளில், இந்தியர்களுக்கான அரசாங்கத் திட்டங்களின் அடைவு நிலையின் அடிப்படையில், அடுத்துவரும் பத்தாண்டுகளில் இப்பெருந்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து இலக்குகளையும் நிச்சயம் அடைய முடியும் என தமக்கு பெரும் நம்பிக்கையுள்ளது என்று அந்த முன்னாள் பிரதமர் உறுதியளித்திருந்தார்.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்றாலும் காலம் அதனை மாற்றி அமைத்து விட்டது. நம்பிக்கை விதைத்த மலேசிய இந்தியர் பெருந்திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாக மீளாத் துயில் கொண்டிருக்கிறது. மித்ரா செயலகத்தின் செயல்பாடுகளில் சுணக்கம் காணப்பட, அது குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அனல் பறக்க, மறைக்கப்பட்ட மலேசிய இந்தியர் பெருந்திட்டம், மீண்டும் தூசு தட்டப்பட்டிருக்கிறது. இந்திய சமூகத்தின் சுமார் 40 விழுக்காட்டு பி40 குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களாகப் பொருளாதார சவால்கள், கல்வியியல் சவால்கள், சமூகச் சவால்கள் ஆகியன பார்க்கப்படுகின்றன.

குடும்ப வருமானத் துறை 2014 – மலேசிய புள்ளிவிபரத் துறையின் ஆய்வறிக்கைப்படி, 0.6 விழுக்காடு அல்லது 3,500 மலேசிய இந்தியக் குடும்பங்கள் ஏழைகள் என வரையறுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாதத்திற்கு வெ.1,000-க்கும் கீழ் வருமானம் பெற்று வாழ்க்கைச் சவால்களை எதிர்நோக்கும் ஏறத்தாழ 22,700 மலேசிய இந்தியக் குடும்பங்கள் மாதம் வெ.1,000-க்கும் குறைவான வருமானம் ஈட்டுக்கின்றன.

ஏறத்தாழ 89 விழுக்காடு மலேசிய இந்தியர்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகின்ற வேளையில், சமூகத்தின் குறைந்த வருமானம் மற்றும் ஏழ்மை பிரச்சினை பெரும்பாலும் நகர்ப்புற பிரச்சினையாகவே விளங்குகின்றன.

இந்த ஆய்வுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்ற அதே வேளையில், மேற்குறிப்பிட்டதுபோல மாதம் வெ.1,000-க்கும் குறைவான வருமானம் ஈட்டும் 22,700 மலேசிய இந்தியக் குடும்பங்களின் தற்போதைய நிலை குறித்து மனம் அடித்துக் கொள்கிறது.

திட்டமிட்டப்படி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் மலேசிய இந்தியர் பெருந்திட்டம் அமலாக்கம் கண்டிருந்தால், இந்த 22,700 இந்தியக் குடும்பங்களின் அவல நிலை மாறியிருக்குமே? இந்த ஆறு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகின்ற நிலையில், நம் சமுதாயம் முன்னேற்றப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறதா அல்லது கீழ் நோக்கி அதலபாதாளத்தில் கிடக்கிறதா என பின்நோக்கி பார்க்க வைக்கிறது.

22,700 இந்தியக் குடும்பங்களை கரை சேர்க்க வேண்டிய இந்தியர்களுக்கான சிறப்பு அரசு கேந்திரங்கள் இருந்திருக்க வேண்டும்! அவைதான் இப்போது இல்லையே! இருக்கின்ற மித்ராவும் பந்தாடப்பட்டு வருகின்ற நிலையில், தகுதியற்ற சில தலைவர்களை பொறுப்பில் அமர வைத்து உள்ளதையும் இழப்பதற்கான ஒத்திகைகள் அரங்கேறி வருவதைப் பார்க்கையில், இரத்தக் கண்ணீர்தான் வருகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here