மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் ஒரு கூட்டத்தையாவது கிளப்பில் நடத்தினேன் என்பதை ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அவர் இதனை நிரூபித்து விட்டால் என் துணை அமைச்சர் பதவியை நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.
இந்த குற்றச்சாட்டை முன்வைத்த அந்த துணை அமைச்சர் இதனை நிரூபிக்கத் தவறினால் துணை அமைச்சர் பதவியை அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சரும் மித்ரா சிறப்புப் பணிக்குழு முன்னாள் தலைவருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று 2024 மார்ச் 30ஆம் தேதி சவால் விடுத்தார்.
பதவியை ராஜினாமா செய்வதற்கு ஒரு துணிச்சலும் தகுதியும் இருக்கிறது. இது அவருக்கு இருக்கிறதா என்று சுங்கைபூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் கேள்வி எழுப்பினார்.
பொய் அரசியல் நடத்த வேண்டாம், அது மிகவும் அசிங்கமானது. இந்த பொய் அரசியல் சம்பந்தப்பட்டவரின் நாணயத்தையும் தகுதியையும் மிக கடுமையாக பாதிக்கும். அதுமட்டுமன்றி அவர் சார்ந்திருக்கும அரசியல் கட்சிக்கும் பெரும் கேடாக அமையும் என்று நிறையத் தடவை நான் சொல்லிவிட்டேன். இந்த பொய் அரசியலுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொறாமையை மூட்டை கட்டி வைத்து விட்டு அவரது வேலையை மட்டும் அவர் செய்யட்டும். என்னுடைய வேலையை நான் செய்கிறேன் என்று டத்தோ ரமணன் அறிவுறுத்தினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சுங்கைபூலோ, கம்போங் பாயா செராஸ், எம்பிஎஸ்ஏ ஸ்ரீ பகி மண்டபத்தில் இன்று மார்ச் 30ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்ற தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற மடானி விற்பனைச் சந்தையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை வலியுறுத்தினார்.