கிரகண நேரத்தில் கோவில்கள் மூடப்படுவதற்கு புராணங்களில் பல கதைகள் சொல்லப்பட்டாலும், எதற்காக கிரகண நேரத்தில் கோவில்கள் மூடப்படுகின்றன? இதற்கு அறிவியல் காரணங்கள் ஏதாவது உண்டா? பக்தர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என எதற்காக சொல்கிறார்கள் என்பதற்கும் ஏதாவது காரணம் உண்டா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
2024ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25ம் தேதி நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த படியாக இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08ம் தேதி நிகழ உள்ளது. நாசா வெளியிட்டுள்ள தகவலின் படி சந்திர கிரகணத்தை போல் சூரிய கிரகணமும் இந்தியாவில் காண முடியாது என சொல்லப்படுகிறது.
வட அமெரிக்கா, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் தான் சூரிய கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியனுக்கு, பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து சென்று, முழுவதுமாக சூரியனை மறைக்கும் நிகழ்வே சூரிய கிரகணம் என சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் வானம் முழுவதுமாக இருள் சூழ்ந்து, தூசிகளால் மறைத்தது போன்ற தோற்றம் ஏற்படும். இது முழு சூரிய கிரகணமாக நிகழ உள்ளதாக சொல்லப்படுகிறது.
கிரகணம் என்பது கெட்ட நேரமாக கருதப்படுவதால் கிரகண நேரத்தில் இந்துக் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்பத அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் சூரிய கிரகணத்தின் போது ஒருவர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என நினைத்தால் அது முடியுமா? அப்படி வழிபடுவதாக இருந்தால் தோஷ நிவர்த்திக்காக எந்த கோவிலுக்கு சென்று வழிபடலாம் என்ற கேள்வி பெரும்பாலானவர்களின் மனதில் இருக்கத் தான் செய்கிறது.
கிரகண நேரத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருக்காது என்பத சிலருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் ஆகும். சந்திர கிரகணம் ஆனாலும் சரி, சூரிய கிரகணம் ஆனாலும் சரி, அந்த சமயத்தில் சில கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. அப்படி கிரகண நேரத்திலும் திறந்திருக்கும் கோவில்களில் ஒன்று தான் ஸ்ரீ காளகஸ்தி காளஹதீஸ்வரர் கோவில். இது ராகு, கேதுவிற்கான பரிகாரம் தலமாகும். அதே போல் கிரகண சமயத்தில் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலும் திறந்திருக்கும். கிரகண சமயத்தில் இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுவது உண்டு.
ராகும் கேதுவும், சூரியன் மற்றும் சந்திரன் சுற்றி வரும் கோள் வட்ட பாதையில் ஏதாவது ஒரு புள்ளியில் குறிக்கிடுவது உண்டு.வானியல் அடிப்படையில் இவை வடக்கு மற்றும் தெற்கு சந்திர முனைகளை குறிக்கின்றன. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடக்கும் போது இந்த சந்திர முனைகளானது முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த சமயங்களில் கிரகணம் நிகழ்கின்றன. இது சூரியனையும், சந்திரனையும் நிழல் கிரகங்கள் அல்லது பாம்பு விழுங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த எதிர்மறை ஆற்றல்களால் கோவிலின் புனித தன்மை கெட்டு விடும் என்பதாலேயே கிரகண நேரத்தில் கோவில்களை பூட்டி வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த எதிர்மறை ஆற்றல்கள் சமநிலையை இழக்கச் செய்யும். அதிலிருந்து பக்தர்களை காப்பதற்காக தான் கிரகண நேரத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்லப்படுகிறது. இதனால் கிரகண நேரத்தில் கோவில்களுக்கு செல்வதற்கு பதிலாக, சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரிப்பது சிறப்பானது. கிரகண நேரத்தில் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறப்பானதாகும்.