நான் நினைச்சிருந்தால் திமுக மீது எத்தனையோ கேஸ் போட்டிருக்கலாம்.. ஆனால் ஏன் போடல தெரியுமா? எடப்பாடி

அரக்கோணம்: திமுகவின் உருட்டல் மிரட்டல்களுக்கு அதிமுக அடிபணியாது. நான் மட்டுமல்ல எங்களது தொண்டன் கூட பயப்பட மாட்டான். நான் நினைத்தால் ஆட்சியில் இருக்கும்போது திமுக மீது எத்தனை கேஸ் வேண்டுமானாலும் போட்டு இருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறக்கிறது. லோக்சபா தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ எல் விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது எடப்பாடி பழனிசமி கூறியதாவது:- வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இனி இடம் கிடையாது. பொய் பேசுவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். ஒரு புக் மாதிரி தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இப்போது நிறைவேற்றியது வெறும் 10 சதவீதத்திற்கு கீழ் தான்.

அதிமுக ஐடி அணி சமூக வலைத்தளங்கள் வாயிலாக உண்மை செய்தி வெளியிட்டால் வழக்கு போடுகிறார்கள். திமுக இதையே வாடிக்கையாக கொண்டு வந்துவிட்டது. சக்கரம் சுத்திக்கொண்டே இருக்கிறது. கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும் போது உங்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்.

நான் முதல்வராக 4 வருடம் 2 மாத காலம் இருந்தேன். நான் நினைத்து இருந்தால் எத்தனை வழக்கு போட்டு இருக்கலாம். செய்யவில்லை.. ஏன் என்று சொன்னால் மக்கள் எனக்கு கொடுத்த பணி… ஒரு நிமிடம் இருந்தால் கூட அதை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என செயல்பட்டேன்.

திமுகவின் உருட்டல் மிரட்டல்களுக்கு அதிமுக அடிபணியாது. நான் மட்டுமல்ல எங்களது தொண்டன் கூட பயப்பட மாட்டான். ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆகியும் மக்களுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் மிச்சம். இது எல்லாம் உங்கள், எங்கள் தலையில் தான் விழும். சிந்தித்து பாருங்கள். காலச்சக்கரம் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. உங்களுக்கும் இதே கதி தான்.

திமுக கொண்டு வந்த திட்டத்தை நான் குறை சொல்வதாக ஸ்டாலின் சொல்கிறார். நான் சொல்கிறேன் திட்டம் கொண்டுவந்தால் தானே குறை சொல்ல முடியும். திட்டமே கொண்டு வரல.. நாங்க எப்படி குறை சொல்ல முடியும். என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள் சொல்லுங்கள்.. தில், திரானி, தெம்பு இருந்தால் நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். எப்போது பார்த்தாலும் செஞ்சோம்.. செஞ்சோம் என்று சொல்கிறார்கள்.

என்ன செய்தீர்கள்?.. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்துகொண்டு இருக்கீங்க.. இத தான் செய்றீங்க.. இந்த 3 ஆண்டுகளில் திமுக என்ன செய்தது என்று நான் சொல்கிறேன்.. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு கடுமையாக உயர்ந்து இருக்கிறது. ஒரு கிலோ அரிசி 15 ரூபாய் உயர்ந்து இருக்கு.

எண்ணெய், பருப்பு விலை உயர்ந்து போச்சு.. ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் கடுமையான சோதனையில் தவித்துக்கொண்டு இருக்கின்ற காட்சி ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் பொம்மை முதல்வர் ஆச்சே.. வீட்டை விட்டு வெளியில் காட்டுவதில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தால் பொதுக்கூட்டத்தில் தான் பார்க்க முடியும். மக்களை பற்றி சிந்திக்காத.. மக்களையே சந்திக்காத இந்தியாவில் ஒரு முதல்வர் இருக்கிறார் என்றால் அது முதல்வர் ஸ்டாலின் ஒருவர் தான்..

வேற எங்கே பார்க்கலாம் என்றால், போட்டோ ஷூட், சைக்கிளில் போவார், பளு தூக்குதல்.. முதலில் பதவியேற்றபோது எல்லாம் டிவியில் அடிக்கடி ஸ்டாலின் பளு தூக்குவதை காண்பித்தார்கள். இதற்காகவா இவரை மக்கள் முதல்வர் ஆக்கினார்கள். உங்களுக்கு கிடைக்கிற நேரத்தை மக்களுக்கு செலழிக்கத்தானே உங்களை மக்கள் முதல்வர் ஆக்கினர்.

மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்காக மக்களிடம் பெட்டியில் மனுவை வாங்கினார் ஸ்டாலின். ஆனால் இந்த பெட்டி இப்போது எங்கே இருக்கிறது. இந்த பெட்டியை பூட்டி பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டார் போல. மக்களிடம் வாங்கிய அந்த குறைகள் என்ன? அதை நிறைவேற்றினாரா? எதுவும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here