6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சர்வ நாசமான மொராக்கோ.. 600ஐ தாண்டிய பலி

ரபாத்: மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இந்த நிலநடுக்கத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளனர். வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு மொரோக்கோ.. அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 3.7 கோடிதான். இந்த நாட்டில் தான் இப்போது மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

நேற்றிரவு ஏற்பட்ட இந்த மோசமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 600க்கு மேற்பட்டோர் பலியாகினர்.. மேலும், பல நூறு பேர் படுகாயமடைந்தனர். இதில் அங்குள்ள பல கட்டிடங்கள் அப்படியே தரைமட்டமாகின. நிலநடுக்கம்: அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பிற்குச் சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை முதற்கட்ட தகவல்கள் தான் என்றும் இது மேலும் அதிகரிக்கும் என்பதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகமே தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நிலநடுக்கத்தால் அல்-ஹவுஸ், மராகேஷ், ஓவர்சாசேட், அஜிலால், சிச்சாவ்வா, தாரூடன்ட் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.. இதில் பல நூறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு (22:00 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கே: அந்நாட்டின் நான்காவது பெரிய நகரமான மராகேஷில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் உள்ள அட்லஸ் மலைகளில் உள்ள ஒகைமெடனின் (Oukaimeden) ஸ்கை ரிசார்ட் அருகே நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட மதீனா என்று அழைக்கப்படும் சிவப்பு சுவர்களும் கூட இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

இப்பகுதியில் நிலநடுக்கங்கள் என்பது வழக்கமானவை இல்லை என்றாலும் முற்றிலும் எதிர்பாராதவை இல்லை என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த 120 ஆண்டுகளில் இந்தளவுக்கு வலுவான ஒரு நிலநடுக்கம் இங்கே ஏற்பட்டதே இல்லையாம். 1900 ஆம் ஆண்டிலிருந்து M6 ரேஞ்சில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் எதுவும் இங்கே ஏற்படவில்லை.. அதேபோல M5 ரேஞ்சில் 120 ஆண்டுகளில் 9 நிலநடுக்கம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்: நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ஒப்பீட்டளவில் ஆழமற்றதாக இருந்துள்ளது. இது நிலத்தில் இருந்து 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. அட்லஸ் மலைகளில் oblique-reverse faulting ஏற்பட்டதே இந்த நிலநடுக்கத்திற்குக் காரணம் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மொராக்கோவில் கடைசியாக 2004இல் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அல் ஹோசிமா பூகம்பம் என்று அழைக்கப்படும் இந்த நிலநடுக்கம், மேற்கு மத்தியதரைக் கடலின் எல்லையில் நாட்டின் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here