அதிர வைத்த ரிங் ஆப் ஃபயர்! தைவானை புரட்டி போட்ட நிலநடுக்கம்

தைவான்: தைவானின் கிழக்கு பகுதியில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தைவான், தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டது. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் பல வெளியாகி உள்ளன.

உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு (0000 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கண்டறிந்து உள்ளது.

ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் மியாகோஜிமா தீவு உட்பட அந்த பிராந்தியத்தில் உள்ள தொலைதூர தீவுகளுக்கு எல்லாம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானிய தீவுகளுக்கு மூன்று மீட்டர் (10 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானில், அதிகாரிகள் குறுஞ்செய்தி மூலம் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டனர், “கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்கவும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மற்றும் அலைகளின் திடீர் எழுச்சியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கவனம் செலுத்தவும்” என்று எஸ்ஓஎஸ் எஸ்எம்எஸ் அனுப்பினர்.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் பல வெளியாகி உள்ளன. அங்கே நிலப்பகுதிகள், பாலங்கள், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

ஆரம்ப நிலநடுக்கம் தைவான் முழுவதும் உணரப்பட்டது. மக்கள் பலரும் தெற்கு பிங்டுங் கவுண்டியில் இருந்து தைபேயின் வடக்கு வரை வலுவான நடுக்கம் ஏற்பட்டதாக புகாரளித்தனர். தைபேயின் வானிலை ஏஜென்சியின் கூற்றுப்படி, ஹுவாலியன் அருகே 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை உள்ளடக்கிய பின்அதிர்வுகள் உணரப்பட்டன. அதாவது ஒரு நிலநடுக்கத்திற்கு பின் ஏற்படும் தொடர் நடுக்கங்கள் அங்கே உணரப்பட்டது.

அங்கே உணரப்பட்ட நிலநடுக்கங்களில் மிக மிக வலுவான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை எத்தனை என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 100 கணக்கில் கட்டிடங்கள் குலுங்கின, 20 கட்டிடங்கள் வரை முதல் கட்டமாக சேதம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரிங் ஆப் ஃபயர்: பசிபிக் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் தைவான், ஜப்பான் அமைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படுவது வழக்கம். இங்கு செசிமிக் செயல்பாடு அதிகம் இருப்பதால் எளிதாக நிலநடுக்கம் ஏற்படும்.

இதன் காரணமாக அடிக்கடி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. தைவானிலும் இதே காரணமாகவே சுனாமி ஏற்படுகிறது. ஜப்பானில் 2011 மார்ச் 11ம் தேதி அங்கு இந்த பேரழிவு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அதை தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டது. இப்போது 13 வருடங்கள் கழித்து மீண்டும் மார்ச் மாதத்தில் அதே புகுஷிமா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here