இலங்கை அதிபர் தேர்தலில் தமிழரைக் களமிறக்கத் திட்டம்

இலங்கையில் இவ்வாண்டின் கடைசி காலாண்டில் அடுத்த அதிபரைத் தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அநேகமாக, நவம்பர் நடுப்பகுதியில் அந்தத் தேர்தல் நடத்தப்படலாம்.

இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் சார்பில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தமிழர் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்து உள்ளது.

சிறுபான்மை சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தமிழர் பிரச்சினைக்கு நம்பகமான அரசியல் தீர்வு காண்பதற்காகவும் தமிழரை அதிபர் தேர்தல் வேட்பாளராக்க அந்தக் கட்சிகள் முயன்று வருகின்றன.

இந்நிலையில், தமிழர்களின் மூத்த தலைவரான 91 வயது இரா சம்பந்தன் இலங்கைக் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக மாவட்டமான திருகோணமலையில் தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “அடுத்த அதிபர் தேர்தலில் தமிழர்களுக்கு நல்லமுறையில் சேவையாற்றக்கூடியவரை ஆதரிக்க விரும்புகிறோம்.

“அரசியல் தீர்வு மூலம் சிறுபான்மையினரின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உறுதியளிக்கும் வேட்பாளரை தமிழர் கட்சிகள் ஆதரிக்கும்.

“தமிழர் ஒருவரை அதிபர் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் விருப்பம்.

“ஆயினும், வெற்றிபெறும் அளவுக்கு தமிழருக்குப் போதுமான ஆதரவு கிட்டாது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, எது சிறப்பானது என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம்.

“கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்பகமான அரசியல் தீர்வு காணக்கூடியவராக அந்த வேட்பாளர் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்,” என்றார் சம்பந்தன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here