குடிக்கவே தண்ணீர் இல்லை.. எல். நினோவால் கோரப்பிடியில் சிக்கிய ஜிம்பாப்வே

ஹராரே: உலகம் முழுவதும் வெப்ப மயமாதல் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த ஆண்டு ஜிம்பாப்வே இதற்கு பலி ஆடாகியுள்ளது. ஜிம்பாப்வே வறட்சி பேரழிவை எதிர்கொண்டிருப்பதாக அந்நாட்டின் அதிபர் அறிவித்திருக்கிறார். பொருளாதார வளர்ச்சியை கண்டு நாட்டின் வளர்ச்சியை அளவிட தொடங்கியபோதே இயற்கை சமநிலையை நோக்கி சென்றுவிட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது பொருள் உற்பத்தி, விற்பனை, அதற்கான சந்தை இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. ஆனால், இதற்காக அந்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் கண்டுக்கொள்ளப்படுவதில்லை என சூழலியல் ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சிக்காக, போட்டிக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக வெளியேற்றப்படும் கரியமில வாயுக்கள் பூமியை தொடர்ந்து சூடாக்கி வருகிறது என்பதுதான் ஆய்வாளர்களின் குற்றச்சாட்டு. இப்படி பூமி சூடாவதால் இயற்கை பேரிடர்களும், தொற்று நோய்களும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மிகவும் குறிப்பாக சொல்வதெனில் மிதமிஞ்சிய தொழிற்சாலை நடவடிக்கைகள் எல்நினோ பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

உலகின் மிகவும் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா -ஆசியா பகுதியில் ஆண்டுதோறும் சூடான காற்று மேலெழும். அதேபோல அதற்கு எதிர் திசையில் உள்ள அமெரிக்க பகுதியில் உள்ள பசிபிக் கடலில் குளிர்ச்சியான காற்று மேலெழும். இந்த இரண்டும் ஒரு கடத்தில் ஒன்று கலந்து வானிலையை இயல்பாக வைத்திருக்கும்.

இந்த காற்றுதான் வெறும் பூமியின் மொத்த நிலப்பரப்பில் மழைபொழிவை உருவாக்குகிறது. ஆனால் இந்த இரண்டு பசிபிக் கடல் பகுதியிலும் ஏதேனும் ஒரு பகுதியில் காற்று உருவாவது தடைபட்டுவிட்டால் வானிலையில் மாற்றம் ஏற்படும். இதைத்தான் எல் நினோ என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் இதன் பாதிப்பு பிரிட்டனிலும், பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பிரிட்டனில் வரலாறு காணாத அளவில் வெப்பம் பதிவாகியிருந்தது.  அதேபோல பாகிஸ்தானில் பெரு வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு இது ஜிம்பாப்வேயை பாதித்திருக்கிறது. எல் நினோ இங்கு வறட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக பெய்யும் மழை 80% பெய்யவில்லை. எனவே போதுமான நீர் இல்லாததால் பயிர்கள் அனைத்தும் வாடி மடிந்துவிட்டது. இதனால், ஜிம்பாப்வேக்கு ரூ.16 ஆயிரம் கோடி உதவியை அந்நாட்டு அரசு எதிர்பார்த்திருக்கிறது. இயற்கை பேரிடரை பொறுத்த அளவில் ஜிம்பாப்வே வெறும் தொடக்கம்தான் என்றும் தென்னாப்பிரிக்கா முழுவதும் இந்த வறட்சி பரவும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வறட்சி அவரச நிலை குறித்து சர்வதேச உதவியை நாடியுள்ள ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மங்கக்வா, “நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவை உறுதி செய்வது என்பதுதான் எங்களின் உடனடி நோக்கம். பட்டினியால் ஒருவர் கூட உயிரிழக்கக்கூடாது என பணியாற்றி வருகிறோம்” என்று கூறியுள்ளார். ஜிம்பாப்வேயின் 1.5 கோடி மக்களில் 60% பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். எனவே இவர்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here