வேலை விசா விதிகளைக் கடுமையாக்குகிறது நியூசிலாந்து

வேலை விசா பெறுவதற்கான விதிகளை உடனடியாகக் கடுமையாக்குவதாக நியூசிலாந்து அறிவித்து உள்ளது. 2023ஆம் ஆண்டு ஏராளமானோர் அங்கு புலம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, தமது விதிகளைக் கடுமையாக்கும் முடிவுக்கு வந்ததாக அந்நாடு கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை ‘தாங்க முடியாத’ அளவுக்குப் போய்விட்டதாக நியூசிலாந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) தெரிவித்தது.

திறன் குறைந்த வேலைகளுக்கு ஆங்கிலத்தைக் கட்டாயமாக்குவது, பெரும் பாலான வேலைகளுக்குக் குறைந்தபட்சத் திறன்கள் மற்றும் வேலை அனுபவத் திற்கான வரம்புகளை வகுப்பது போன்றவை இந்த மாற்றம் பெறும் விதிகளில் அடங்குகின்றன.

முக்கியமாக, பெரும்பாலான வேலைகளில் நியமிக்கப்படும் வெளிநாட்டினர் நியூசிலாந்தில் தொடர்ந்து தங்கி இருக்கக்கூடிய காலவரம்பு ஐந்தாண்டில் இருந்து மூன்றாண்டாகக் குறைக்கப்படுகிறது.

உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் போன்ற திறன்மிகுந்த வேலைகளில் ஆள்பற்றாக்குறை நிலவுகிறது. அதுபோன்ற பணிகளில் வெளிநாட்டினரை நியமித்து, அவர்களைத் தக்கவைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது,” என்று குடிநுழைவுத்துறை அமைச்சர் எரிக்கா ஸ்டேன்ஃபர்ட் தமது அறிக்கை யில் குறிப்பிட்டு உள்ளார்.

2023ஆம் ஆண்டில் சாதனை அளவை நெருங்கக்கூடிய அளவில் 173,000 பேர் நியூசிலாந்துக்குப் புலம்பெயர்ந்தனர். ஏறக்குறைய 5.1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நியூசிலாந்திற்குப் புலம் பெயர்வோர் எண்ணிக்கை, கோவிட்-19 பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் வேகமாக அதிகரித்து வருகிறது.

அந்த நிலவரத்தால் நியூசிலாந்தின் பணவீக்கம் அதிகரித்துவிடுமோ என்ற கவலை அந்நாட்டு அரசாங்கத்துக்குக் கடந்த ஆண்டு ஏற்பட்டது.

அண்டை நாடான ஆஸ்திரேலியாவிலும் ஏராளமானோர் குடிபுகுந்துவிட்டனர். அதனால், அடுத்த ஈராண்டுகளுக்கு வெளிநாட்டினர் வேலை நியமன எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கப் போவதாக ஆஸ்திரேலியா ஏற்கெனவே அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here