(கவின்மலர்)
சிம்பாங் அம்பாட், ஏப்.
கராத்தே அமைப்பின் முதல் நோக்கம் இளையோரை நல்வழிப்படுத்துவதேயன்றி அதைக் கொண்டு பணம் சம்பாதிப்பதல்ல என்று கராத்தே டோ ஒக்கினாவா கோஜுரு சங்கத்தின் கிராண்ட் மாஸ்டர் ஆனந்தன் தெரிவித்தார்.
சிம்பாங் அம்பாட்டில் மாஸ்டர் முருகையா தலைமையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கராத்தே வகுப்பை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மாஸ்டர் முருகையாவின் தலைமையிலும் பயிற்சியிலும் கலந்துகொண்ட பல கராத்தே வீரர்கள் தேசிய அளவிலும் நாட்டைப் பிரதிநிதித்தும் கலந்துகொண்டு பல பதக்கங்களை வெற்றி கொண்டு நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமைப் பெற்றுத்தந்துள்ளனர். அத்தகைய ஒருவரின் தலைமையில் நமது பிள்ளைகள் கராத்தே பயிற்சி பெறுவது வரவேற்கத்தக்கதாகும் என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய கெடா மாநில கராத்தே சங்கத் தலைவர் மாஸ்டர் முனைவர் ஸ்டாலின் இவ்வட்டார இளைஞர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி கராத்தே வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கட்டொழுங்கு மிக்க இளைய தலைமுறையை உருவாக்க கராத்தே போன்ற தற்காப்புக் கலைகள் பெரிதும் துணை செய்யும் என்று அவர் நினைவுறுத்தினார். வாழ்த்துரை வழங்கிய பினாங்கு மாநில கராத்தே சங்க ஆலோசகர் ராம் என்ற பரமகுருபரன் மோகன் நமது இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு இத்தகைய தற்காப்புக் கலைகள் பெரிதும் துணை செய்யும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கெடா மாநில கராத்தே சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ ஏண்டி, கெடா, பினாங்கு, பேராக், மாநிலங்களைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர்களான மாஸ்டர் லோகநாதன், மாஸ்டர் ஆறுமுகம், மாஸ்டர் சரவணன்,மாஸ்டர் விஜய், மாஸ்டர் குணா, மாஸ்டர் இராமன், மாஸ்டர் தியாகராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக தொடக்க விழா அனிச்சல் வெட்டப்பட்டது.