கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள தமிழ், சீனப் பள்ளிகள் தொடர்பில் பல சர்ச்சையான கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், பல-பிரிவுகள் அடங்கிய ஒரு நாட்டின் கல்வி அமைப்புக்கு இத்தகைய கல்விக் கழகங்கள் பங்களிப்பதை அண்மைய ஆய்வு கண்டறிந்துள்ளதாக மலேசிய சீனக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்துள்ளார்.
தமிழையும் சீனத்தையும் இந்தத் தாய்மொழிப் பள்ளிகள் தத்தம் கற்பித்தல் மொழிகளாகப் பயன்படுத்துவதுடன், குறிப்பிட்ட சில கலாசாரப் பின்னணிகளுக்கும் ஏற்ப இயங்குகின்றன. அதனால், தாய்மொழிப் பள்ளிகளின் சட்டபூர்வ தன்மையையும் பங்களிப்புகளையும் மலேசியாவின் சட்டமும் பொதுமக்களும் அங்கீகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர், இதைவிட முக்கியமான விவகாரங்களில் தங்களின் கவனத்தைச் செலுத்துமாறு டாக்டர் மா கோரினார்.
நாட்டின் ஒற்றுமைக்குத் தாய்மொழிப் பள்ளிகள் இடையூறாக இல்லை என்று யுசிஎஸ்ஐ கணக்கெடுப்பு ஆய்வு நிலையம் நடத்திய ஆய்வில் பங்கேற்றோரில் 70 விழுக்காட்டினர் கூறியிருந்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.
மலேசியர்களுக்கு இடையே இத்தகைய தாய்மொழிப் பள்ளிகள் பிளவை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வில் 71 விழுக்காட்டினர் தெரிவித்தும் உள்ளனர்.
இதற்கிடையே, அண்மைய ஆண்டுகளாக உள்நோக்கமுள்ள அரசியல்வாதிகள், நபர்கள், அமைப்பினர் ஆகியோர் தாய்மொழிப் பள்ளிகளின் செயல்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதும் அவற்றின் தேவை குறித்து கேள்வி எழுப்புவதுமாகத் தொடர்ச்சியாக பல முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகக் கூறிய டாக்டர் மா, இது அரசியல்ரீதியாகப் பலன் காணும் குறுக்கு வழி என்றார்.