கோலாலம்பூர்:
இன்று திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் அசுர வேகத்தில் முன்னேறி, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிக வலுவான நிலையை எட்டியுள்ளது. 4 ரிங்கிட் என்ற தடையை உடைத்து, ரிங்கிட்டின் மதிப்பு 3.98 என்ற நிலைக்கு உயர்ந்திருப்பது பொருளாதார வட்டாரங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.98 ஆக வர்த்தகமானது.
கடந்த வெள்ளிக்கிழமை 4.04 ஆக இருந்த மதிப்பு, இன்று ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
வரலாற்றுப் பின்னணி: இதற்கு முன்னதாக கடந்த 2018 மே 24-ஆம் தேதி அன்றுதான் ரிங்கிட் இதேபோன்ற (3.97) வலுவான நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிங்கிட் வலுவடைய முக்கிய காரணங்களாக மத்திய வங்கி (BNM) தனது OPR வட்டி விகிதத்தை மாற்றாமல் 2.75 விழுக்காட்டில் நிலைநிறுத்தியது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது,
அடுத்து சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலர் குறியீடு சரிந்து வருவது, ரிங்கிட் போன்ற ஆசிய நாணயங்கள் வலுவடையச் சாதகமாக அமைந்துள்ளது.
மேலும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த சாதகமான மதிப்பீடுகள் ரிங்கிட்டிற்கான தேவையை அதிகரித்துள்ளதும் காரணம் என்றார் .
பேங்க் முஅமலாட் மலேசியா (Bank Muamalat) நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அஃப்சானிசாம் அப்துல் ரஷீத் கூறுகையில், “மலேசியாவின் பொருளாதாரம் குறித்த சாதகமான பார்வை ரிங்கிட்டிற்குப் பலம் சேர்க்கிறது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது, ரிங்கிட் இன்னும் வலுவடைவதற்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.
ரிங்கிட் வலுவடைவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும், மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான செலவுகளும் குறையும்.



















