மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமயம் கோட்டை பைரவர் – அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுரை சத்யவாகீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய இருந்த நிலையில் கடைசி நேரத்தில் வந்த தகவலால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னணி காரணம் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனியாக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்த அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். இன்றும், நாளையும் தமிழகத்தில் அவர் பாஜக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி அமித்ஷா சிறப்பு விமானத்தில் உத்தர பிரதேசத்தில் இருந்து மதுரைக்கு மாலை 4.30 மணிக்கு வந்தார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுாக சென்று பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து வாகன பேரணி செய்வதாகவும், அதன் பிறகு திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் – அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை சத்யவாகீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று தென்மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஹெலிகாப்டர் செல்வதற்கு ஏற்ற காலநிலை என்பது இல்லை. திருமயத்தில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட ஹெலிபேட் பகுதியிலும் சாதகமான காலநிலை இல்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு ஹெலிகாப்டரால் தரையிறங்க முடியாது.
இப்படி கடைசி நேரத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத சூழலால் அமித்ஷாவின் திருமயம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அமித்ஷா மதுரையில் மட்டுமே வாகன பேரணி நடத்தி பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து ஓட்டு சேகரிக்கிறார். இந்த வாகன பேரணி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற உள்ளது.
அதன்பிறகு அமித்ஷா சிறப்பு விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார். திருமனந்தபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கும் அமித்ஷா நாளை காலை ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சென்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு திருவனந்தபுரம் சென்று விமானத்தில் திருச்சி வந்து ஓட்டலில் மதிய உணவு முடித்து ஓய்வு எடுக்கிறார்.
இதையடுத்து மதியம் 3 மணிக்கு நாகை பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு தென்காசி லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடும் நிலையில் அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















