ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 10 அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் கோல குபு பாரு இடைத் தேர்தலை மஇகா புறக்கணித்ததா? எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் பொய்த்துவிட்டது- ரமணன்

பி.ஆர்.ராஜன்

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி  இடைத்தேர்தல் பிரச்சாரத்தை  மஇகா புறக்கணிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சாரம் பொய்த்துவிட்டது என்று தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை சாடினார்.

இந்திய சமுதாயத்தின்  மேம்பாட்டிற்காக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளோடு பாரிசான் நேஷனலை சேர்ந்த மஇகா களம் இறங்கியிருப்பது இந்த இடைத்தேர்தல் வெற்றியை உறுதிசெய்வதாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளும் ஒரு சில தரப்பினரும் பொய்களைச் சொல்லி  மக்களை குழப்பி வருகின்றனர். இதனை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலை மஇகா புறக்கணிக்கிறது என்று எதிர்க்கட்சிகளும் சில தரப்பினரும் மூன்று தினங்களுக்கு முன் கூறினர். ஆனால் அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், தேசியத் துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகிய இருவரும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடவடிக்கை அறையை புதன்கிழமை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜசெக, பிகேஆர் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதுதான் ஒற்றுமை அரசாங்கத்தின் பலமாகும்.  இந்த  நிகழ்ச்சியின் மூலம் எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவர்களின்  பொய்கள் கோல குபு பாரு வாக்காளர்கள் குறிப்பாக இந்திய சமுதாயத்திடம் இனி எடுபடாது என்று இங்கு இந்திய மக்களுடனான மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) நடத்திய சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ரமணன் தெரிவித்தார்.

10 கடற்படை உயர் அதிகாரிகளின் மறைவுக்கு அஞ்சலி

இதனிடையே லுமூட் கடற்படை தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் மோதிக்கொண்டு விழுந்து நொறுங்கியதில் அவற்றில் பயணித்த 10 அரச மலேசிய கடற்படை அதிகாரிகளின் அகால மரணம் நாட்டுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் மிகப் பெரிய இழப்பு என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

இவர்களின் இந்த அகால மறைவால் அவர்களின்  குடும்பத்தினரின் மொத்த மகிழ்ச்சியையும் அள்ளிச் சென்றிருக்கிறது. குறிப்பாக பெற்றோருக்கு ஒரே மகனான சித்தியவானைச் சேர்ந்த லெப்டினன் சிவசுதன் தஞ்சப்பன் மறைவு மிகப் பெரிய வலியைத் தரக்கூடியதாகும்.

திருமணமாகி மூன்றே மாதங்கள் ஆன நிலையில் அவரின் மனைவிக்கு தீராத வலியைத் தந்துள்ளது இந்த அகால மரணம். அவரின் தாய், தந்தையர் மனம் உடைந்து கத்திக் கதறிய காட்சி இதயங்களை நொறுக்குவதாக இருந்தது.

தன் தாய்- தந்தை, இளம் மனைவி, இரண்டு சகோதரிகள், உறவினர்கள் ஆகியோரை மீளாத்துயரில் ஆழ்த்தியிருக்கும் சிவசுதனின் மரணம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.

மனம் நொறுங்கி பெரும்  துயரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த 10அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அதனை தாங்கிக் கொண்டு விரைந்து அதிலிருந்து வெளியில் வருவதற்கு எல்லாம் வல்ல இறைவன் மனோபலத்தை தர வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here