கோஷ்டி மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பலி.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

 கொல்கத்தா: லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர், மோதலில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பகுயாட்டி அர்ஜுன்பூர் பகுதியில் நேற்று இரவு இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒரு குழுவினர் மற்றொரு பகுதியின் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் தகவல் அறிந்து அங்கு போலீசார் வந்துள்ளனர். பின்னர் போலீசார் அங்கிருந்து சென்றதும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செங்கல் மற்றும் கட்டைகளால் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதல் படுகாயம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சஞ்சீவ் தாஸ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலில் பலியான சஞ்சீவ் தாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இது திட்டமிடப்பட்ட கொலை எனக் கூறி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஆனந்தபூர் பகுதியில் பாஜக பெண் நிர்வாகியான சரஸ்வதி சர்க்கார் என்பவர் நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டார். தாக்குதலில் தலையில் காயமடைந்த சரஸ்வதி சர்க்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here