முதலீட்டு மோசடி: ஜோகூரில் 19 பேர் கைது

ஜோகூர் பாரு:

ஜோகூரில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், முதலீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் 19 பேரை ஜோகூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 16 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு உள்ளூர் ஆண்கள், ஏழு பெண்கள், நான்கு வெளிநாட்டு ஆடவர்கள் ஆகியோர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

“அந்தக் கும்பல் பிப்ரவரியிலிருந்து செயல்பட்டு வருவதாக விசாரணைகள் காட்டுகின்றன. மூன்று வாடகை வீடுகள் தொலைபேசி அழைப்பு நிலையங்களாக மாற்றப்பட்டு, முகவர்களாகும் உறுப்பினர்களுக்கு 2,500 ரிங்கிட் மாதாந்தரச் சம்பளம் வழங்கப்பட்டது.

அதோடு, மேற்பார்வையாளர்களுக்கு மாதம் 7,000 ரிங்கிட் வரை சம்பளம் வழங்கப்பட்டது,” என்று ஜோகூர் காவல்துறை தலைமை ஆணையர் எம். குமார் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட 19 பேரில் ஒருவர் மேற்பார்வையாளராகச் செயல்பட்டார். மற்றவர்கள் முகவர்களாக இருந்ததாக அவர் சொன்னார்.

‘டெலிகிராம்’, ‘டிக்டாக்’, ‘விசேட்’ உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் மூலம், அந்தக் கும்பல் உள்ளூர்வாசிகளையும் வெளிநாட்டவர்களையும் குறிவைத்ததாகத் குமார் கூறினார்.

காவல்துறையினர் 73 கைப்பேசிகள், 40 சிம் அட்டைகள், ஒரு வாகனம், சாவிகள் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த வழக்கு தற்போது விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்கு உதவ அந்த 19 பேரும் சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here