கோலாலம்பூர்:
உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் புவிசார் அரசியல் சிக்கல்களிலிருந்து நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், மக்காச்சோள இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றியமைக்க மலேசியா மாபெரும் உள்நாட்டு பெரு நடவு உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக விவசாயம், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
செப்பாங் கெந்திங் தானா மேரா தோட்டத்தில் நடைபெற்ற உள்ளூர் மக்காச்சோள ரகங்கள், மாபெரும் பெரு நடவு உற்பத்தித் திட்டத் தொடக்க விழாவில் பேசிய அவர், மார்டி (MARDI) நிறுவனம் உருவாக்கியுள்ள MZ1, MZ2 ரகங்கள் வணிக ரீதியிலான மாபெரும் பயிரிடுதலுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.
மலேசியாவின் ஆண்டொன்றிற்காண மக்காச்சோள இறக்குமதி, சுமார் 3 பில்லியன் ரிங்கிட் மதிப்பளவில், 2.5 மில்லியன் டன்னாக உள்ள நிலையில், முதற்கட்டமாக 3 முதல் 4 சதவீத உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் இத்திட்டம், எதிர்காலத்தில் 2,500 ஹெக்டரில் பெர்லிஸிலும், 5,500 ஹெக்டரில் சரவாக் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், இது கோழித் தீவன விலையைக் கட்டுப்படுத்தி கோழியின் விலையையும் முட்டையின் விலையையும் நிலைநிறுத்த பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
























