அன்பு தேவையில்லை, சமத்துவம்தான் வேண்டும் என்கிறார் உரிமை கட்சி தலைவர்

கோலாலம்பூர்:

நாட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலில் சேர விண்ணப்பம் செய்யுமாறு உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமியிடம் ஆளும் கட்சியான ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபட்சில் பரிந்துரை செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக “தான் அவ்வாறு செய்யப்போவதில்லை” என்று பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியுடன் தமக்கு எவ்விதக் கருத்துப் பிணக்கமும் இல்லை என்றார் அவர்.

ஆனால் நாட்டில் உள்ள பிற இனத்தவர்களுக்குச் சமமாக மலேசிய இந்தியர்கள் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமசாமி கூறினார்.

மலேசியர்கள் என்கிற முறையில் இங்குள்ள இந்தியர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசுத் துறை வேலைகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இந்தியர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்காததை அவர் சுட்டினார்.

மலேசிய இந்தியர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகள் முன்புபோல பாரபட்சத்துடன் நடந்துகொள்ளவோ அவர்களைத் துன்புறுத்தவோ முயற்சி செய்தால் உரிமைக் கட்சி தட்டிக் கேட்கும் என்றார் டாக்டர் ராமசாமி.

முன்னதாக, இந்தியர்களுக்குத் தந்த வாக்குறுதிகளைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் இன்னும் நிறைவேற்றாததால், மே 11ஆம் தேதியன்று கோல குபு பாருவில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அக்கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று டாக்டர் ராமசாமி அழைப்பு விடுத்ததார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் ராமசாமி எதிர்க்கட்சியில் சேர வேண்டும் எனத் ஃபாஹ்மி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here