பி.ஆர். ராஜன்
கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தற்போது ஓர் இமாலய கேள்வியாக உயர்ந்து நிற்கிறது. இந்திய சமுதாயத்திற்கு ஆதரவாகவும் அவர்களின் நல்வாழ்வுக்குப் பொருத்தமான திட்டங்களையும் கொண்டு வருபவர்களை ஆதரிப்பதுதான் நியாயம் என்று ஒரு தரப்பினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து அரசியல் லாபம் பெறும் முயற்சியில் இன்னொரு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
யாரால் தங்களுக்கு நன்மைகள் கொண்டு வர முடியும் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இந்திய சமுதாயம் இருக்கிறது. இதற்கு ஆயிரம் காரணங்களையும் நியாயங்களையும் முன்வைக்க முடியும். இருப்பதையும் இழப்பதற்கு நமக்கு சக்தி இல்லை.

ஆனால், இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக சமயத்தையும் கல்வியையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் தரப்பினரை ஆதரிக்க வேண்டுமா என்பதை இந்திய சமுதாயம் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
இந்தத் தரப்பைச் சேர்ந்தவர்கள் தான் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் உட்பட தாய்மொழிப் பள்ளிகள் இருக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குத் தொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு தோல்வி மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.
இருப்பினும், தாய்மொழிப் பள்ளிகளை ஒழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வழக்குத் தொடுப்பதை இத்தரப்பினர் நிறுத்தவே இல்லை. மேலும், இதுபோன்ற வழக்குகள் வேண்டாம் என்று இத்தரப்பில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிப்பதும் தடுப்பதும் இல்லை. விடாது துரத்தும் ஒரு விவகாரமாகவே இது இருக்கிறது.

தமிழ்ப்பள்ளிகள் உட்பட தாய்மொழிப் பள்ளிகள் இந்நாட்டில் செயல்படுவதற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் இதனை தௌ்ளத் தெளிவாக வரையறுத்திருக்கிறது.
சட்டம் தெளிவாக இருக்கிறது. ஆனால், இவர்கள் இன்னமும் தெளிவு பெறவில்லை. வீம்புக்காக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இவர்களை ஆதரிக்கத்தான் வேண்டுமா என்பதை இந்திய சமுதாய வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும்.
தெரியாத தேவதையைவிட தெரிந்த பேய் எவ்வளவோ மேல் என்று நம்ப வேண்டிய தருணம் இது. உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளால் சமுதாய மக்களுக்கு தீராத துன்பத்தையும் இழப்பையும் தந்துவிட வேண்டாம்.

மேலும், இந்திய சமுதாயத்தைக் குறிப்பாக இந்துக்களை ஒரு கும்பல் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் கொச்சைப்படுத்தி வருகிறது. இந்துக்கள் இதனால் காயப்படுகின்றனர் என்று தெரிந்தும் – உணர்ந்தும் இந்தத் தரப்பில் அவர்களைக் கண்டிப்பதற்கு ஒரு நாதியும் இல்லை.
இவர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இந்திய சமுதாயம் தெளிந்த சிந்தனையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்துக்களை இழி சொல்லால் தொடர்ந்து காயப்படுத்தும் ஒரு தரப்பினரை இவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற நிலையில் இவர்களா நாளை நம்மைக் காக்கப் போகிறார்கள்? இந்திய சமுதாயம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.











