நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. எனவே லட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப் பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது. இதனால் அந்த அணையின் தடுப்புச்சுவர் இடிந்து அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்றது.
எனினும் கட்டட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 181ஐத் தாண்டியது. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.





















