கிளந்தானுடாக சட்டவிரோத ஊடுருவல் – 2 சீனர்கள் உட்பட 11 பேர் கைது

கோலாலம்பூர்:

கிளந்தான் மாநிலத்தின் ஜெராம் பெர்தா (Jeram Perdah) பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட ‘ஓப் தாரிங் வாவாசான்’ (Op Taring Wawasan) அதிரடி சோதனையில், இரண்டு சீன நாட்டவர்கள் உட்பட மொத்தம் 11 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

ஏழாவது பட்டாலியன் ஸ்டிரைக் ஃபோர்ஸ் குழு, பாசிர் மாஸ் போலீஸ் மற்றும் போலீஸ் வான்வழி ட்ரோன் பிரிவின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, தென்கிழக்கு பிராந்திய பொதுப் பாதுகாப்புப் படை (GOF) தளபதி, சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர் அஹ்மட் ராட்ஸி ஹுசைன் கூறினார்.

முதல் நடவடிக்கை இரவு 10:00 மணியளவில் கம்போங் சிராம் பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 முதல் 36 வரையுள்ள 9 மியன்மார் நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள், 5 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் முறையான பயண ஆவணங்கள் இன்றி, அங்கீகரிக்கப்படாத பாதைகள் வழியாக இவர்கள் நாட்டிற்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது.

இரண்டாம் நடவடிக்கை, இரவு 11:05 மணிக்கு ஜாலான் பாங்கோல் நியோர் (Jalan Banggol Nyor) என்ற இடத்தில் 2 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களும் முறையான ஆவணங்கள் இன்றி ‘பாக் அந்தா’ (Pak Antah) சட்டவிரோத படகுத்துறை வழியாக மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன: மியன்மார் குழுவினர் மே 11 அன்று தாய்லாந்திற்கு விமானம் மூலம் வந்துள்ளனர். பின்னர் சுங்கை கோலோக் (Sungai Golok) அருகே இரண்டு நாட்கள் தங்கியிருந்து, ஒரு தாய்லாந்து ஏஜெண்டிற்கு தலா 3,000 பாட் (RM390) பணம் கொடுத்து படகு மூலம் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர்.

சீனக் குடிமக்கள் மே 9 அன்று தாய்லாந்து வந்து சேர்ந்தனர். மலேசியாவில் உள்ள உறவினர்களைப் பார்க்க வருவதாகக் கூறி, சுமார் 3,500 பாட் (RM455) செலுத்தி சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரும் குடிவரவுச் சட்டம் 1959/63-ன் கீழ் பிரிவு 6(1)(c)-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் ட்ரோன் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here