ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் குற்றத்திற்காக அந்நாட்டு அதிபர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்தேவச நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பிக்க தயாராகி வருகிறது. ஆனால், இதை தடுக்க சில நாடுகள் முயற்சிப்பதாகவும், அப்படி செய்யும் நாடுகள் குற்றவாளி என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,500க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போக கூடாது என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவால்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்’ (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் மட்டுமல்லாது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை அதிகாரி ஹைம் ஹலிவி ஆகியோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கைது வாரண்ட் ஓரிரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கும் நடைமுறையை சில நாடுகள் தடுக்க முயற்சிப்பதாக நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. “சில அரசு நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் நீதிமன்ற உறுப்பினர்களை மிரட்டுவதை நாங்கள் நன்றாகவே உணர்ந்துள்ளோம்! தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு வழக்கு பாயும். எங்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் நாடுகளும் குற்றவாளிகளே!” என்று எச்சரித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பது 90களில் உருவானது. போர் குற்றம், தீவிரவாதம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்களை இந்த நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு மட்டுமே இந்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு பொருந்தும் என்பதால் ஒரு சில நாடுகள் மட்டுமே இதில் உறுப்பினராக இருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம் இருந்த போது, ஒரு வழக்கில் அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடனே இந்த நீதிமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து அந்நாடு விலகிக்கொண்டது. மட்டுமல்லாது இந்நீதிமன்றத்தின் முக்கிய அதிகாரிகள் யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது என்றும் உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.