போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் 6 வெளிநாட்டவர்கள் உட்பட 9 பேர் கைது

மே 2 முதல் 6 வரை மாநிலத்தில் நடந்த பல சோதனைகளில், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 9 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிட்டி சென்டர், ஆயிர் ஈத்தாம் மற்றும் பெர்மாடாங் பாவ் ஆகிய இடங்களில் நடத்திய சோதனையில், உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்பட இருந்ததாகக் கருதப்படும் RM274,482 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த மே 2 ஆம் தேதி முதலில் ஒரு ஜோடி, உள்ளூர் ஆண் மற்றும் 32 மற்றும் 34 வயதுடைய வியட்நாமிய பெண்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு காவல்துறை தலைவர், டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்.

அவர்கள் மதியம் 2.30 மணியளவில் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும், வீட்டிற்குள் நடத்திய சோதனையில் RM9,198 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே நாளில் மாலை 6 மணியளவில் ஆயிர் ஈத்தாமில் போலீசார் இரண்டாவது சோதனையை மேற்கொண்டனர், அதில் 40 மற்றும் 42 வயதுடைய வியட்நாம் தம்பதியைக் கைது செய்தனர்.

இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 490 எக்ஸ்டசி மாத்திரைகள், 240 எராமின் 5 மாத்திரைகள், 421.89 கிராம் சியாபு மற்றும் 48.12 கிராம் எடையுள்ள கெட்டமைன் ஆகிய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 104,296 ரிங்கிட் என்று, இன்று பினாங்கு காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

தொடர் கைதுகளில் இரண்டாவது, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணியளவில் பெர்மாடாங் பாவில் உள்ள கார் கழுவும் கடையை போலீசார் சோதனை செய்து, 22 முதல் 26 வயதுடைய மூன்று மியன்மார் ஆண்களை கைது செய்ததாக ஷுஹைலி கூறினார்.

இந்த சோதனையில், கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 146,000 ரிங்கிட் மதிப்புள்ள 47 கிலோ எடையுள்ள 45 வெளிப்படையாக தெரியும் பொட்டலங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

“இந்த மூன்று சந்தேக நபர்களும் அங்கு வேலை செய்கிறார்கள் என்றும் செபெராங் பிறை தெங்கா மாவட்டத்தைச் சுற்றியுள்ள சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்பு, போதைப்பொருள் கும்பலுக்குச் சொந்தமான பொருட்களை சேமித்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

மேலும், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிறை மற்றும் பட்டர்வொர்த்தில் தனித்தனியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு 34 மற்றும் 46 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 14,988 ரிங்கிட் பெறுமதியான 1.81 கிலோகிராம் ஹெரோயினையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் விளக்கினார்.

“சந்தேக நபர்களை கைது செய்ததைத் தொடர்ந்து, RM96,324 மதிப்புள்ள பணம், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இப்போது ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here