ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்னும் முற்றிலும் பதற்றம் தனியாத நிலையில், பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை பாதுகாப்பு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது தொடங்கி இப்போது வரை ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
அவ்வப்போது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலில் சில ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதும், பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்படுவதும் தொடர் சம்பவங்களாக நடந்து வருகின்றன. இருப்பினும் சமீப நாட்களாக இந்த தாக்குதல் சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதாக நீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு கூறி வருகிறது.
இப்படி இருக்கையில் இன்று பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படையின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் குறித்து அறிந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
ஷாசிதார் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படையின் மற்ற வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.பூஞ்ச் பகுதியில் ஏற்கெனவே இந்த ஆண்டு ஜனவரியில் இதேபோன்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் 12ம் தேதி நள்ளிரவில், கிருஷ்ண காடி பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றுக்கொண்டிருந்தன. அப்போது வனப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்.
இப்படி இருக்கையில், இன்று மீண்டும் இப்படி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பயங்கரவாதிகள் சதி செயலில் ஈடுபடுகிறார்களோ என்கிற அச்சத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது. இன்று நடத்த தாக்குதல் சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. தேடுதல் நடவடிக்கை முடிந்த பின்னர் இது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.





















