ரெய்காவிக்: ஐஸ்லாந்து நாட்டில் கரியமில வாயுவை உறிஞ்சி அதைப் பாறையாக மாற்றும் தொழிற்சாலை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. அது என்ன செய்கிறது.. ஏன் அது ரொம்ப முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகில் இப்போது புவி வெப்ப மயமாதல் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு புவி வெப்ப மயமாதலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே ஐஸ்லாந்து நாட்டில் ஒரு ஆலை அமைந்துள்ளது. இந்த மிகப் பெரிய ஆலை காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நேரடியாக உறிஞ்சி அதை நிலத்திற்கு அடியில் சேமித்து வைக்கிறது.
என்ன செய்யும்: சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான கிளைம்வொர்க்ஸ் மற்றும் ஐஸ்லாந்தின் கார்ப்ஃபிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த மாபெரும் ஓர்கா ஆலையை அமைத்துள்ளன. இந்த ஆலையில் மொத்தம் 4 யூனிட்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு யூனிட்களிலும் கப்பல்களில் இருக்கும் கண்டெய்னர்களை போன்ற இரண்டு உலோகப் பெட்டிகள் இருக்கும். அவை தான் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை நேரடியாக உறிஞ்சி அதை நிலத்திற்கு அடியில் சேமித்து அதைப் பாறைகளைப் போல மாற்றுகிறது.
ஓர்கா என்றால் ஐஸ்லாந்தில் எனர்ஜி என்று பொருள். இதன் காரணமாகவே இந்த ஆலைக்கு ஓர்கா எனப் பெயர் வைத்துள்ளனர். ஓர்கா ஆலை ஒவ்வொரு ஆண்டும் 4,000 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து தனியாக உறிஞ்சி எடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சுமார் 870 கார்களில் இருந்து ஓராண்டிற்கு வெளியாகும் கார்பன் டை ஆக்சைடை ஆகும்.
புவி வெப்ப மயமாதல்: பல்வேறு காரணங்களால் உலகில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அத்தியாவசிய ஒன்றாக மாறி இருக்கிறது. புவி வெப்ப மயமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடை முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்தெடுக்கும் இந்த தொழில்நுட்பம் புவி வெப்ப மயமாதலையும் நிச்சயம் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.