மறைந்தார் வேலாயுதம்.. தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏவை நினைத்து கலங்கிய பிரதமர் மோடி.. இரங்கல்

சென்னை: தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏவான சி.வேலாயுதம் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜக என்னதான் தேசிய கட்சியாக இருதாலும் தமிழகத்தில் இது வரை பெரியதாக காலூன்றியதில்லை. இருப்பினும் கடந்த காலங்களில் பாஜக எம்எல்ஏக்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர்தான், பாஜக மூத்த தலைவர் சி.வேலாயுதம். இன்று கன்னியாகுமரி பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் கோட்டையாக இருக்கிறது எனில், இதற்கு இவர் போட்ட விதைதான் காரணம்.

மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் சுமார் 14 ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரியில் பாஜகவுக்கு ஒர் எம்எல்ஏ கிடைத்தார். அதாவது 1996ம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் சி.வேலாயுதம். 2001ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பாஜக, 4 எம்ஏல்க்களை பெற்றது. திமுக கூட்டணியில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மயிலாடுதுறையில் ஜெகவீரபாண்டியன், காரைக்குடியிலிருந்து எச்.ராஜா, மயிலாப்பூரில் லட்சுமணன், தளி தொகுதியில் முரளிதரன் ஆகியோர் பாஜக மக்கள் பிரதிநிதிகளாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர். அதற்குப் பிறகு நடந்த மூன்று தேர்தல்களிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை இழந்ததோடு ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட பெறவில்லை. அதற்கு பின் 20 ஆண்டுகளுக்கு கழித்து மாநில கட்சியான அதிமுகவுடன் இணைந்து 2021ல் தேர்தலை சந்தித்தது பாஜக. அதற்கு பலனாக நான்கு எம்எல்ஏக்களும் கிடைத்தனர்.

இப்படியாக கூட்டணி கட்சின் ஆதரவுடன் வெற்றி பெருவதற்கு முன்னர் தனித்து நின்று வென்று காட்டியவர்தான் வேலாயுதம். 1996 தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுகதான் கோலோச்சியது. இருப்பினும் கன்னியாகுமரியின் பத்மநாபபுரம் தொகுதியில் சி.வேலாயுதம் திமுக வேட்பாளர் பால ஜனாதிபதியை 4,540 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இவர்தான் தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவாவார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருந்தார். இப்படியாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதல் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் திரு சி.வேலாயுதம் அவர்களின் மறைவை அறிந்து வேதனையடைந்தேன். அவரைப் போன்றவர்கள்தான் தமிழ்நாட்டில் நமது கட்சியைக் கட்டமைத்து, மக்களிடம் நமது வளர்ச்சித் திட்டங்களை விளக்கியவர்களாவர். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் மீது அவர் கொண்ட அக்கறைக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என மோடி x தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல, “C.வேலாயுதன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழகத்தில் அவர் பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் மற்றும் மாநிலத்தில் கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அவர், கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆற்றிய சேவைகள் என்றென்றும் நினைவு கூரப்படும். எனது எண்ணங்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் உள்ளது. ஓம் சாந்தி” என உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் x தளத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here