MDH மற்றும் Everest நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனமான எத்திலீன் ஆக்ஸைடின் தடயம் இல்லை என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான Fssai அறிவித்துள்ளது.

இதனிடையே ஏப்ரல் 22 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவு பாதுகாப்பு ஆணையர்கள் மற்றும் பிராந்திய இயக்குநர்களை உள்ளடக்கிய நாடு தழுவிய ஆய்வு இயக்கத்தை எஃப்எஸ்எஸ்ஏஐ தொடங்கியது. இது எவரெஸ்ட் மற்றும் எம்டிஹெச் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சோதனைக்காக சேகரித்தது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள எவரெஸ்டின் கிடங்கு சேமிப்பகத்தில் இருந்தும், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள எம்டிஹெச் சேமிப்பில் இருந்தும் மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அறிக்கையின்படி, ஆய்வுக்குழு இதர பிராண்டுகளின் 300 மசாலா மாதிரிகளை ஆய்வு செய்தது, ஆனால் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்ஸைடின் தடயம் கிடைக்கவில்லை. இந்த ஆய்வு முடிவுகள், மேற்படி இந்திய தயாரிப்புகள் நுகர்வுக்கு பாதுகாப்பானவை என்பதைக் காட்டுகிறது. சர்ச்சைக்கு ஆளான இரு நிறுவனங்களால் விற்கப்படும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளில் தொடங்கி, பரவலாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








