கெடா, பேராக்கில் அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளை உடைத்து கைவரிசை காட்டும் கும்பல் கைது

அலோர் ஸ்டார்:

கெடா மற்றும் பேராக்கில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளுக்குள் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படும் மூன்று பெண்கள் உட்பட 11 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பல் ‘கெங் கபாங்’ என அழைக்கப்படுவதாகவும்,கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் , அனைவரும் பாலிங்கைச் சேர்ந்தவர்கள் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ பிசோல் சலே கூறினார்.

“இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த கும்பல் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. இவர்கள் அரச அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, கட்டிடத்தின் பின்புற வேலியை வெட்டி உள்ளே சென்று, அங்குள்ள மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற மின்னணு உபகரணங்களை திருடுவார்கள்.

இந்த சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்ததன் மூலம், கெடாவில் உள்ள 25 அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளை உடைத்த வழக்குகளை நாங்கள் வெற்றிகரமாக தீர்த்துள்ளோம்”என்று அவர் இன்று கெடா போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் குற்றச் செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மூன்று கார்கள் மற்றும் 20 கையடக்கத் தொலைபேசிகள், ஆறு நோட்பாட், மூன்று கேமராக்கள் மற்றும் பல பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் சொன்னார்.

“மேலும் சோதனைகளில் அவர்கள் அனைவருக்கும் கடந்தகால குற்றவியல் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் சந்தேக நபர்களில் எட்டு பேர் மெத்தம்பேட்டமைன் பாவித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் பிரிவு 457 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் வரும் சனிக்கிழமை வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர், ”என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here