ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்.. ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் இலக்குடன் காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், பெரும்பாலான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இறுதி இலக்காக தெற்கு பகுதியில் உள்ள ரபாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் யாசின் ரபியா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று அறிவித்துள்ளது. இவர் மேற்கு கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர்.

உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் வடமேற்கு ரபாவில் உள்ள சுல்தான் என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்கு கரையில் ஹமாசின் செயல்பாடுகளை யாசின் ரபியா முழுமையாக நிர்வகித்தார். இலக்குகளுக்கு நிதியை மாற்றியதுடன், மேற்கு கரை முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது. 2001 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் ரபியா பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாகவும் இதில் இஸ்ரேலிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார். அவர், மேற்கு கரையில் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாகவும்,  காசா பகுதியில் ஹமாசின் நடவடிக்கைகளுக்காக நிதியை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here