பட்டர்வொர்த்:
அவசரக் காலங்களில் உயிர்களையும் உடைமைகளையும் காக்க வேண்டிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் பணிகளுக்கு, ‘போலி அவசர அழைப்புகள்’ (Fake emergency calls) பெரும் தடையாக இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் (செயல்பாடுகள்) டத்தோ அகமட் இஸ்ராம் உஸ்மான் (Datuk Ahmad Izram Osman) கூறுகையில், நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரை பினாங்கில் மட்டும் 11 போலி அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
“ஒவ்வொரு அழைப்பையும் நாங்கள் உண்மையான அவசர நிலையாகவே கருதி, உடனடியாகப் பணியாளர்களையும் வாகனங்களையும் அனுப்பி வைக்கிறோம். ஆனால், அந்த இடத்திற்குச் சென்ற பிறகு அது போலி எனத் தெரியவரும்போது, அரசு வளங்கள் வீணடிக்கப்படுவதுடன், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. மிக முக்கியமாக, எங்கள் குழுவினர் போலி அழைப்பிற்காகச் சென்றிருக்கும் நேரத்தில், உண்மையான ஆபத்து நிகழ்ந்தால், அது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்,” என்று எச்சரித்தார்.
பினாங்கில் இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை மொத்தம் 2,434 அவசர அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் நீண்ட வறண்ட காலநிலையால், காடுகள் (121), புதர்கள் (546) மற்றும் பண்ணை நிலங்களில் (10) தீ விபத்துகள் அதிகரித்துள்ளன.
தீ விபத்துகளால் ஏற்பட்டுள்ள மதிப்பீடு செய்யப்பட்ட இழப்பு சுமார் 23.86 மில்லியன் ரிங்கிட் ஆகும். அதேவேளையில், துரித செயல்பாட்டின் மூலம் 45.75 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மேலும் தீயணைப்புச் சட்ட அமலாக்கத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 633 வளாகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 220 வளாகங்களில் முறையான தீயணைப்புச் சான்றிதழ்கள் (Fire Certificate) இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாத 141 வளாகங்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அவசரச் சேவைகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், இத்தகைய போலி அழைப்புகள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.





















