காஜாங்:
ப்ரோகா ஹில்லில் கடந்த திங்கட்கிழமை (மே 27) முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டுவந்த 16 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
நேற்று (மே 28) பிற்பகல் 2.50 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மேற்கொண்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்புத்துறை பொறுப்பாளர் வான் முஹமட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
ப்ரோகா ஹில் நுழைவாயிலில் இருந்து 100 மீற்றர் தொலைவில் குறித்த சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் 10 மீ உயரமுள்ள குன்றிலிருந்து விழுந்தது போல் தோன்றியது” என்று அவர் கூறினார்.
அந்த இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சகத்தின் மருத்துவக்குழு அந்த வாலிபனின் உடலை பரிசோதித்து, பிற்பகல் 3.42 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் வெளியூர் பயணம் வந்த இடத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது.



















