கோலாலம்பூர்:
கோலாலம்பூரிலிருந்து பெட்டாலிங் ஜெயா நோக்கிச் செல்லும் பெடரல் நெடுஞ்சாலையில், ஜாலான் காசிங், ஜாலான் தீமூருக்கு வெளி யேறும் சாலைக்கு இடையில் தீ சம்பவம் நிகழ்ந்தது.
இது அங்கிருந்த மின்னணு விளம்பர பெயர்ப்பலகை பகுதியில் ஏற்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
அப்பகுதியிலிருந்து பெருமளவான கரும்புகை வந்ததையும், மக்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அதனை பார்த்துக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.
மேலும் பல்கலைக்கழக மலாயா மருத்துவ மையம் அருகே இன்று வெள்ளிக்கிழமை (மே 31) நண்பகல் ஏற்பட்ட குறித்த தீ சம்பவத்தின்போது, அப்பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 வெளிநாட்டினர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, தீ மேலே பரவுவதற்கு முன்பு மின்னணு விளம்பர பலகையின் அடிப்பகுதியில் மின் கசிவு ஏற்பட்டது என்றார்.
பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது, மற்றவர்களுக்குக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க துணை மருத்துவர்களும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை முழுமையான அறிக்கை வெளியிட்ட பின்னர், இது பற்றிய மேலதிக விவரங்கள் தெரிவிக்கப்படும்.




















