ஜோகூர்:
இராணுவ விமானத்தில் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகள் கடத்தப்பட்ட விவாகாரம் தொடர்பில் விசாரணை நடைபெற்றுவருகிறது என்று, இராணுவ தளபதி டான்ஶ்ரீ முஹமட் ஹஃபிசுதீன் ஜன்தான் கூறினார்.
வெளிநாட்டு அமைதி காக்கும் பணியின் போது, அனுமதியின்றி இராணுவத்தினர் துப்பாக்கிகளை இராணுவ விமானத்தில் ஏற்றி நாட்டுக்குள் கடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இக் குற்றச்சாட்டை நாங்கள் கடுமையாக கருதுகிறோம். குறிப்பாக இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது. எனவே நான் இந்த விவகாரத்தை ஊகிக்க விரும்பவில்லை என்றும், அதே வேளையில் நாங்கள் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறோம் என்றும் அவர் சொன்னார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரி யாராக இருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று அவர் கூறினார்.




















