ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2023 வரை பாஜக ஆட்சி நடந்தது. கடந்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் அப்போதைய பாஜகவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர். பாஜக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளர் கேசவ பிரசாத் 2023 மே 8ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி பாஜகவின் பெயருக்கு அவப்பெயர் விளைவித்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் முன்னிலையாகி பிணை பெற்றனர். ஆனால் ராகுல் காந்திக்கு இன்னும் இந்த வழக்கில் பிணை கிடைக்கவில்லை. ஜூன் 1ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

ஆனால், மக்களவைத் தேர்தலின் காரணத்தினால் ஆஜராகாமல் ராகுல் காந்தி மேலும் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், வழக்கறிஞர் ஒருவர் இறந்ததால், நீதிமன்றத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதனால் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here