கவனம் பெறும் சீமானின் வளர்ச்சி; கவிதை மூலம் வைரமுத்து வாழ்த்து

மாநில கட்சிக்கான அங்கீகாரத்தினை எட்டியிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமானுக்கும் கவிஞர் வைரமுத்து இன்று பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மண் கவ்வின.

சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதில் விதிவிலக்கல்ல. ஆன போதும் கட்சி வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை சீமான் கட்சி எட்டியுள்ளது. கணிசமான வாக்குகளை பெற்றதன் மூலம் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை நாதக வென்றுள்ளது.

சீமான்

2010ல் தொடங்கப்பட்டு 2016ல் தேர்தலில் களமிறங்கிய நாதக படிப்படியாக வளர்ந்து வருகிறது. இளம் வயதினரை பெருவாரியாக ஈர்த்து வரும் நாதக, உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவை என எந்த தேர்தலையும் தவிர்க்காது துணிந்து களமிறங்கி வருகிறது. சீமானின் ஆவேசமும், ஆணித்தரமும், திறமும் வாய்ந்த தனித்தமிழ் பேச்சு இளம்வயதினரை கட்டிப்போடுகிறது.

இந்த வகையில் தனக்கென தனி வாக்குவங்கியை வளர்த்து வரும் சீமான், வெற்றிகளை ருசிக்காது போனாலும் நம்பிக்கை இழக்காதிருக்கிறார். தன்னை நம்பிய தம்பி, தங்கைகளின் நம்பிக்கைக்கும் உரமூட்டி வருகிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் சவாலை எதிர்கொண்டது. அதன் பிரத்யேக கரும்பு விவசாயி சின்னம் கிட்டாது தட்டிப்போனது. கிடைத்த ‘மைக்’ சின்னத்துடன் களமிறங்கி கணிசமான வாக்குகளை சீமான் பெற்றிருக்கிறார்.

இந்த வகையில் தமிழ் நாட்டில் மட்டும் 8.1 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மாநிலக் கட்சியாக நாதக அங்கீகாரம் பெறுகிறது. “நீதிமன்றத்தில் முறையிட்டும் கிடைக்காத கட்சி சின்னத்தை மக்கள் மன்றத்தில் முறையிட்டு திரும்பப் பெருவேன்” என்று சபதமிட்ட சீமானுக்கு அது கைகூடி வருகிறது.

இவற்றின் மத்தியில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு பலரும் வாழ்த்துகளை பரிமாறி வருவதன் மத்தியில், கவிஞர் வைரமுத்துவும் நாம் தமிழர் சீமானை வாழ்த்தியுள்ளார்.

’மக்களவைத் தேர்தலில்

8.19 விழுக்காடு

வாக்குகள் பெற்றுத்

தேர்தல் ஆணையத்தின்

அங்கீகாரம் பெற்ற

நாம் தமிழர் கட்சியையும்

அதன் தலைமை

ஒருங்கிணைப்பாளர்

சீமானையும் பாராட்டுகிறேன்…’ என்று தொடங்கும் கவிதையை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அவர் பாராட்டு தெரிவித்திருக்கிறார். அதனை இணையவாசிகள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here