ஜோகூர் பாரு:
கடந்த மாதம் 58.6 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சிங்கப்பூரர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட டான் சியாவோ வெய், 49, மற்றும் ஈ சோங் கியாட், 36, ஆகியோருக்கு எதிரான குற்றம் ஜோகூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர் சாலினி முன்நிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றச்சாட்டுகளைப் புரிந்து கொண்டதாக தலையசைத்தனர்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், மே 29, இரவு 10.30, இஸ்கண்டார் புத்திரி, தாமன் ஹொரைசன் ஹில்ஸ், ஜாலான் அஞ்சாங் 8/1 என்ற இடத்தில் 58,625 கிராம் மொத்த எடை கொண்ட எம்.டி.எம்.ஏ போதைப்பொருளைக் கடத்தியதாக அவர்கள் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















