புதுடெல்லி:
இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘நாகாஸ்திரா-1’ ஆளில்லா விமானத்தின் (ட்ரோன்) முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எதிரிகளின் இலக்கை குறிவைத்துத் தாக்கி அழிக்கும் இந்த ஆளில்லா விமானங்களை நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் ‘உருவாக்கி உள்ளது.
120 நாகாஸ்திரா-1 ஆளில்லா விமானங்கள் இராணுவ வெடிமருந்து கிடங்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ராணுவம் இஇஇஎல் நிறுவனத்திடம் 480 விமானங்களுக்கு தருவிப்பு ஆணை வழங்கியது.
ஒன்பது கிலோ எடை கொண்ட நாகாஸ்திரா -1 விமானம், வானில் 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. மேலும் 30 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடியது.
இதுதவிர 4,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பறக்கக்கூடிய இந்த ஆளில்லா வானூர்தியை ரிமோட் மூலம் கட்டுபடுத்த முடியும்.
மேலும் இது, பகல்-இரவு கண்காணிப்பு கேமராக்கள், வெடிமருந்துகளை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.
நாகாஸ்திரா அமைப்பு வான்வெளியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
ஆனைக்கு ஏற்ப தாக்குதலை உடனே நிறுத்திக்கொள்ளும் திறன்கொண்டது.
இலக்கு கண்டறியப்படாவிட்டால் அதன் செயல்பாட்டை நிறுத்தி பாராசூட்டை பயன்படுத்தி தரையிறக்கம் செய்து அதனை மீண்டும் பயன்படுத்தலாம்.
மறுபயன்பாட்டு அம்சங்களில் முன்னேறிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஆளில்லா வானூர்திகளை விட நாகாஸ்திரா பல அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.