கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயத் துயரை அடுத்து, தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கள்ளச் சாராயத் தயாரிப்பு, விற்பனை, கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் குண்டர் சட்டத்தில் ஓராண்டுக்கு கைது செய்யப்படுவர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள், ஏழு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்படும் என்றும் மதுவிலக்கு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி கூறியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த இரு நாள்களில் மட்டும் கல்வராயன்மலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.





















