அரசு உதவி பெற்ற 363 தமிழ்ப்பள்ளிகளின் தர உயர்வுக்கு 25.41 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நாட்டில் உள்ள 363 அரசு உதவி பெற்ற தமிழ்ப்பள்ளிகளில் தர உயர்வு, கழிப்பறை பழுதுபார்ப்பு போன்ற பணிகளுக்காக கல்வி அமைச்சு 25.41 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஒவ்வொரு பள்ளியும் 70,000 ரிங்கிட் வரை பெறும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்று பத்து காஜா பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

பள்ளியின் மேலாளர் வாரியம் இந்த நிதிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாடாளுமன்ற மக்களவையில் அவர் எழுப்பி ஒரு கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சு இந்த உறுதியை வழங்கியது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும் பள்ளிகளில்அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துவதற்கும் உத்தரவிட்டிருக்கிறார். கல்வி அமைச்சு இந்த பணியை செவ்வனே செய்து வருகிறது.

2024ஆம் ஆண்டில் பள்ளிகளில் சிறிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகளையும் தர உயர்வுகளையும் அமல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு 134.44 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்தத் தொகையில் 25.41 மில்லியன் ரிங்கிட் அரசாங்க உதவி பெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சிவகுமார் கூறினார்.

அனைத்து மொழிப் பள்ளிகளிலும் கல்வி போதனையோடு அடிப்படை கட்டமைப்புகளையும் உயர்த்த வேண்டும் என்பதில் கல்வி அமைச்சு மிகுந்த கடப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் ஓர் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க வேண்டும் என்பது மலேசிய மடானி அரசாங்கத்தின் விருப்பமாக இருக்கிறது.

இந்த ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மிகவும் சௌகரியமான சூழ்நிலையில் அவர்கள் கல்வி கற்பதற்குரிய சூழலை ஏற்படுத்துகிறது.

இனம், மதம் பாராது அனைத்து இன மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயல்பட்டுவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகளில் இந்த திட்டம் ஆக்கப்பூர்வமான ஒன்றாக உள்ளது. மலேசிய மடானி இலக்கிற்கு ஏற்ப பள்ள்ளிகளில் குறிப்பாக கல்வி நலன்களில் அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

பிரதமரின் தலைமைத்துவத்தில் இதுபோன்ற ஒத்துழைப்பு கூட்டு முயற்சிகள் ஆகியவை நாட்டில் கல்வித்தரம் உயர்வதற்கு பெரும் பங்காற்றும் என்பதை சுட்டிக்காட்டிய சிவகுமார், இந்த ஆரோக்கியமான நிலையில் ஆக்கப்பூர்வமாக கல்வி கற்பதில் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு தம்முடைய முழு ஒத்துழைப்பு இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here