அதிக வேலை: வாழ்க்கையே வெறுத்து போச்சு..திடீரென தற்கொலை செய்து கொண்ட ரோபோ! என்ன காரணம்?

சியோல்: தென் கொரியாவில் அரசு உதவியாளராக பணிபுரிந்து வந்த ரோபோ திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாம். தற்கொலைக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு இடத்தை அந்த ரோபோ சுற்றிச் சுற்றி வந்த நிலையில், திடீரென அது தற்கொலை செய்து கொண்டுள்ளது. இதற்கான காரணம் துல்லியமாகத் தெரியவில்லை. இது தொடர்பான ஆய்வுக்கு பிறகே இதற்கான காரணம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நமது உலகில் இப்போது ரோபோ பயன்பாடு அதிகரித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரோபோ பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.

தற்கொலை: மனிதர்களைப் போலத் தவறு செய்யாது… டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்காது உள்ளிட்ட காரணங்களால் இந்த ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்கிடையே மிகவும் வினோதமான நிகழ்வு ஒன்று தென் கொரியாவில் நடந்துள்ளது. அங்கு அந்நாட்டு அரசுக்குக் கீழ் இயங்கி வந்த ரோபோ ஒன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பது யாருக்குமே தெரியவில்லையாம். கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அதன் உடல் அதே கட்டிடத்தில் கண்டறியப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உலகில் இதற்கு முன்பு இது போல நடந்ததே இல்லை. இதுதான் உலகின் முதல் ரோபோ தற்கொலையாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்து ரோபோவுக்கு இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.

என்ன காரணம்: தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரோபோ ஒரே குறிப்பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வந்ததாகவும் மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அதேநேரம் தற்கொலைக்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. இப்போது ரோபோவின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஆராய்ச்சிக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தினசரி ஆவணங்களை வழங்குவது, உள்ளூர்வாசிகளுக்கு உதவுவது ஆகியவை தான் இந்த ரோபோவின் முக்கிய பணியாக இருந்தது. திடீரென இந்த ரோபோ தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இது வருத்தமளிப்பதாக நகர சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2023 முதல் இதுபோல வேலை செய்து வந்த ரோபோ தான் இப்போது திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது.

நெட்டிசன்கள்: ரோபோ இதுபோல தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இணையத்தில் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அதீத பனி சுமை காரணமாக ரோபோ இதுபோல தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிறார்கள். பிரேக் இல்லாமல் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை செய்து வருவதால் வெறுப்படைந்த ரோபோ தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் ஆய்வுக்குப் பின்னரே என்ன நடந்தது என்பது குறித்துத் தெளிவாகத் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த ரோபோ: தென் கொரியாவில் வைத்து வந்த அந்த ரோபோவை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பியர் ரோபாட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கி இருந்தது. இந்த ரோபோவுக்கு தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் இருந்தது.. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இது வேலை செய்யும் நேரமாகும்.. இதற்கு முன்பு இருந்த இதுபோன்ற உதவியாளர் ரோபோக்கள் பொதுவாக ஒரு தளத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த வகை ரோபோக்களால் லிஃப்ட் மூலம் பல தளங்களில் வேலை செய்ய முடியுமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here