சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து 402 பேரோந்திக் குட்டிகள் பறிமுதல்

சென்னை:
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) காலை சென்னை விமான நிலையத்தில் சென்றடைந்த ஆண் பயணி ஒருவரிடமிருந்து 402 பேரோந்தி (இகுவானா) குட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்திலிருந்து ‘கிரீன் சேனல்’ வழியாக வெளியேற முற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அந்த ஆடவரை அதிகாரிகள் வழிமறித்தனர்.

அவர் தூக்கிச்சென்ற இரு அட்டைப்பெட்டிகள் குறித்து அதிகாரிகள் வினவியதற்கு, தம் பிள்ளைகளுக்காக விளையாட்டுப் பொருள்களையும் சாக்லெட்டுகளையும் தாம் கொண்டு செல்வதாக அந்தப் பயணி பதிலளித்தார்.

எனினும் சந்தேகம் ஏற்பட, அந்த அட்டைப்பெட்டிகளைத் திறந்த அதிகாரிகள், அவற்றில் நூற்றுக்கணக்கான பேரோந்திக் குட்டிகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குச் சென்ற அதிகாரிகள், அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தினர்.

பேரோந்திக் குட்டிகள் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதால், அவற்றை தாய்லாந்துக்குத் திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

அட்டைப்பெட்டிகளில் இருந்த 402 பேரோந்திக் குட்டிகளில், மூச்சுத்திணறல் காரணமாக 67 குட்டிகள் மடிந்துவிட்டன.

இறந்தவற்றை அட்டைப்பெட்டிகளில் இருந்து அகற்றிய அதிகாரிகள், எஞ்சியவற்றை திங்கட்கிழமை (ஜூலை 8) காலை பேங்காக்கிற்கு அனுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here