ஒழுங்கான விசா கூட இல்லை.. இந்திய வீரர்கள் எங்களுக்கு தேவையே இல்லை என்கிறார் ரஷ்யாவின் முக்கிய அதிகாரி

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலரும் பணியாற்றி வரும் நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரமதர் மோடி சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய ராணுவம் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் அரசு முறை சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றிருந்தார். இப்போது அவர் தனது ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரியாவுக்குச் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி வைத்த கோரிக்கை: அதேநேரம் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் போது பிரதமர் மோடி சில முக்கிய கோரிக்கைகளை விடுத்திருந்தார். இதற்கிடையே ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக ரஷ்யா கூறியுள்ளது. மேலும், ராணுவத்திற்கு ஆட்சேர்பு என்பது முழுக்க முழுக்க வணிக ரீதியானது என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையே இந்தியர்கள் தனது ராணுவத்தின் ஒரு பகுதியாக இருப்பதை ரஷ்யா ஒருபோதும் விரும்பவில்லை என்றும் போர்களில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் ரஷ்ய அரசு பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தப் பிரச்சினையில் நாங்கள் இந்திய அரசின் பக்கமே இருக்கிறோம். விரைவில் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

வலியுறுத்தல்: முன்னதாக பிரதமர் மோடி சமீபத்தில் தான் ரஷ்யா அதிபர் புதினை நேரில் சந்தித்திருந்தார். அப்போது பிரதமர் மோடி புதினிடம் நேரடியாக இந்த விவகாரத்தை எழுப்பினார். ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் இந்தியர்கள் முன்கூட்டியே விடுவித்து தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா பதில் என்ன: இதையடுத்தே இப்போது இதில் ரஷ்யா விரைவில் தீர்வு காணும் என்றும் இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.. இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. ரஷ்யா ராணுவத்தில் உள்ள வீரர்கள் குறித்து நாங்கள் எந்தவொரு அறிவிப்பையும் செய்திருக்க மாட்டோம். அதையும் நீங்கள் நோட் செய்திருக்கலாம்.

பெரும்பாலான இந்தியர்கள் பணத்திற்காக ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளனர். அதுவும் மிகக் குறைந்த அளவிலேயே ராணுவத்தில் இணைந்துள்ளனர். 50, 60 அல்லது அதிகபட்சம் 100 இந்தியர்கள் தான் ரஷ்ய ராணுவத்தில் இருப்பார்கள். அவர்கள் காசு சம்பாதிக்கவே ராணுவத்தில் இருக்கிறார்கள்.. இந்தியர்கள் எங்கள் நாட்டு ராணுவத்தில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

சட்டவிரோதமாக உள்ளனர்: மேலும், இதுபோல இங்கு வந்தவர்களில் பலருக்கும் உரிய விசா கூட இல்லை. அவர்கள் சுற்றுலா விசாக்களில் வந்துவிட்டு, சட்டவிரோதமாக வேலை செய்கிறார்கள்” என்றார். ராணுவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் ரஷ்யக் குடியுரிமை வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு அவர், ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தத்தின்படியே இது நடக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here