சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

கோண்டா: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நான்கு பயணிகள் பலியாகினர். 20 பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழு விரைந்துள்ளது. மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. 40 பேர் கொண்ட மருத்துவக் குழுவும், 15 ஆம்புலன்ஸ்களும் விபத்து நடந்த பகுதிக்குச் சென்றுள்ளன. காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியில் மருத்துவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சண்டிகரில் வாரம் இருமுறை அசாம் மாநிலம் திப்ருகர் செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் புதன்கிழமை இரவு 11.20க்கு புறப்பட்டது. வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணி அளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா நிறுத்தத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி ரயில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது கோண்டா மற்றும் ஜுலாஹி ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள பிகவுரா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். திப்ரூகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக காவல்துறையின் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின.

மோடிகஞ்ச் – ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டதாகவும், இந்த விபத்தில் இதுவரை நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here