கெனிங்காவ்:
நேற்று (ஜூலை 20) ஜாலான் கெனிங்காவ்-தம்புனான் சாலையின் 39 ஆவது கிலோமீட்டரில் வாகனத் தொடரணியின் போது, அதிவேக மோட்டார் சைக்கிள் டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்துடன் மோதியதில் ரோயல் புரூணை ஆயுதப் படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
காலை 10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், சார்ஜென்ட் மேஜர் முகமட் ஜோரிமான் அப்துல் லத்தீஃப் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், அவரது உடல், கால் மற்றும் இடது விலா எலும்புகளில் பலத்த காயம் அடைந்தார். கெனிங்காவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சுமார் 5 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று, மாவட்டக் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் யாம்பில் அனாக் கராய் கூறினார்.
பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும், ஜூலை 19 முதல் 21 வரை நடைபெறும் ஆசியான் பைக் வீக்/பைக் ஃபெஸ்ட் MC/MG மோட்டார் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கெனிங்காவிலிருந்து சண்டாக்கானுக்குச் சென்று கொண்டிருந்தனர் என்று விசாரணையில் தெரியவந்ததாக அவர் சொன்னார்.
வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக டொயோட்டா ஹிலக்ஸ் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் பொறுப்பற்ற அல்லது ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.





















