நிலத்தகராறில் புதைக்கப்பட்ட இளையர் தெருநாய்களால் உயிர் பிழைத்த அதிசயம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்ட 24 வயது இளையர் ஒருவர் தெரு நாய்களால் தோண்டி எடுக்கப்பட்ட அதிசயம் நடைபெற்றுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்தவர் ரூப் கிஷோர். ஜூலை மாதம் 18ஆம் தேதி ஆர்டோனி பகுதியில் சென்றுகொண்டிருந்த தன்னை அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் என நால்வர் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.

கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துவிட்டார் எனக் கருதி நால்வரும் அவர்களது பண்ணையில் கிஷோரைப் புதைத்தனர். கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அங்குச் சுற்றித் திரிந்த தெருநாய்கள் தோண்டத் தொடங்கின. அப்போது கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவருக்கு நினைவு திரும்பியது. இதனால் அங்கிருந்து எழுந்த அவர், அப்பகுதியில் இருந்து வெளியேறினார். உள்ளூர்வாசிகள் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

கிஷோரின் தாய், நான்கு பேர் தனது மகனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டினார். இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது என்றும் தப்பிச்சென்ற நான்கு பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுகிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here