கடல், தரை, வான்வழி ஹமாஸ் சரமாரி தாக்குதல்.. இஸ்ரேல் உக்கிர பதிலடி- 300 பேர் பலி, 2500 பேர் படுகாயம்

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் கடல், தரை, வான்வழி என மும்முனைத் தாக்குதலை நடத்தினர். இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல்களில் இருதரப்பிலும் இதுவரை சுமார் 300 பேர் மரணமடைந்துள்ளனர்; 2,500 பேர் படுகாயமடைந்துள்ளனர்; உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்பு இன்று காலை 6.30 மணி முதல் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தி ஊடுருவியது. ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனியர் படை இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றது.

ஹமாஸ் தாக்குதல்: Operation Al-Aqsa Flood என்ற பெயரில் ஹமாஸ் இயக்கம் இத்தாக்குதலை தொடங்கியது. சுமார் 7,000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுவினர். கடல், தரை மற்றும் வான்வழியில் ஹமாஸ் இயக்கம் இத்தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேல் பதிலடி: Operation Iron Swords என்ற பெயரில் காஸா முனை, மேற்கு கரை பகுதியில் நிலை கொண்டுள்ள ஹமாஸ் ஜிஹாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இஸ்ரேலின் டெல் அவிவ் வடக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களையும் தெற்கு இஸ்ரேலுக்குள் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனர்கள் ஊடுருவலையும் ஹமாஸ் மேற்கொண்டது. இதனையடுத்தே ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா முனை பகுதியில் அதிரடி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

300 பேர் பலி, 2500 பேர் படுகாயம்: இதுவரையிலான தாக்குதல்களில் இஸ்ரேல் தப்பில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனர்கல் 160 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 300 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டுகின்றன சர்வதேச ஊடகங்கள். இருதரப்பிலும் தற்போது வரை 2,500 பேர் வரை படுகாயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும் இதனால் உயிரிழப்பு மேலும் கிடுகிடுவென அதிகரிக்கும் எனவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறுதி யுத்தம்- ஹமாஸ்: இத்தாக்குதல் தொடரபாக அல் ஜசீரா டிவி சேனலிடம் பேசிய ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் கலீத் குடோமி, பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு பதிலடிதான் இந்த தாக்குதல். காஸா முனையில் பாலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறைகளை நிறுத்த சர்வதேசம் முன்வர வேண்டும் என்பதற்காகவே இத்தாக்குதல் என்கிறார். ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தெய்ப், இந்த பூமிப்பந்தில் இனி ஆக்கிரமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் இத்தாக்குதல் நடத்தப்படுகிறது என்றார்.

போரில் வெல்வோம்- இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த யுத்தத்தில் நாங்களே வெல்வோம் என்கிறார். இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கால்லன்ட், இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல் மூலம் ஹமாஸ் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது; நிச்சயம் பாடம் கிடைக்கும் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here