கெடாவில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவும் நிர்வகிக்கவும் தரவுகள் முக்கியப் பங்காற்றுகின்றன

கோத்தா ஸ்டார்:

2024 விவசாய கணக்கெடுப்பு தரவுகள் கெடா மாநிலத்தில் நெல் விவசாயத்தை மேலாண்மை செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் முதன்மை அம்சமாக விளங்கும் என நம்பப்படுகின்றது.

நில மேலாண்மை, பொருளாதார திட்டமிடல், உற்பத்தியை வளப்படுத்துதல், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்த விரிவாக – சரியான தகவல்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள முடியும் என்று புள்ளி விவரத்துறை தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்தார்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கப் பெறும் தரவுகள், தகவல்களைப் பயன்படுத்தி விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதோடு, அபாயங்களையும் அவர்களால் தவிர்க்க முடியும்.

எனவே, நெல் நடவு நடவடிக்கைகள் குறிப்பாக கெடா மாநிலத்தில் தற்போதைய நிலவரங்களை சித்திரிப்பதற்கு பொதுமக்கள் தவறாது புள்ளி விவரத் துறையிடம் தகவல்கள் வழங்குவது அவசியமாகின்றது என்று குபாங் ரோத்தான், கம்போங் மஸ்ஜிட்டில் 2024 விவசாய நடவடிக்கை கணக்கெடுப்பை பார்வையிட வந்த அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

அவருடன் மூடா விவசாய மேம்பாட்டு வாரிய முதன்மை நிர்வாகி ஹாஜி கமாருடின், கெடா மாநில துணை ஆணையர் (தொழில்நுட்பம்) நடியா மர்ஸுக்கியும் வந்திருந்தார்.

இந்நிலையில் கெடாவின் உள்நாட்டு உற்பத்தி விகித ஆய்வறிக்கை அடிப்படையில் 2023ஆம் ஆண்டு அம்மாநில பொருளாதாரம் 1.6 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டு அம்மாநில பொருளாதார விகிதம் 51.0 பில்லியன் என பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 51.8 பில்லியனாக உயர்ந்திருக்கின்றது.

அதிலும் 2023ஆம் ஆண்டு சேவை துறைதான் இம்மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு அதிகளவில் அதாவது 56.2 விழுக்காடு வரையில் பங்களிப்பை வழங்கியுள்ளது.

தொடர்ந்து உற்பத்தித்துறை 29.2 விழுக்காடும் விவசாயத்துறை 109.7 விழுக்காடும் பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. இது தவிர கட்டுமானத் துறை 3 விழுக்காடும் குவாரி, சுரங்கத் துறைகள் 0.2 விழுக்காடு பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டில் மலேசியாவில் அதிக அளவில் நெல் விவசாயத்தைக் கொண்ட மாநிலமாக கெடா விளங்குகின்றது. அவ்வாண்டு கெடா மாநிலத்தில் மட்டும் 213.7 ஆயிரம் ஹெக்டர் நிலப் பரப்பளவில் நெல்நடவு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சரவாக்கில் 77. 7 ஆயிரம் ஹெக்டர் நிலத்திலும் பேராக்கில் 74.6 ஆயிரம் ஹெக்டர் நிலத்திலும் கிளாந்தானில் 74.0 ஆயிரம் ஹெக்டர் நிலத்திலும் நெல் நடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கெடா மாநிலத்தில் மட்டுமே 834.9 ஆயிரம் டன் மெட்ரிக் கணக்கில் நெல் அறுவடை செய்யப்பட்டது. மலேசியா முழுவதும் இந்த எண்ணிக்கைதான் மிகவும் உயர்நிலையில் இருந்தது.

அதேபோல் தீபகற்ப மலேசியாவில் நெல் வெளியீட்டில் கெடா 41.2 விழுக்காடு பங்களிப்பைக் கொண்டுள்ளது.

மலேசியா முழுவதும் கணக்கெடுத்தால் கெடா மாநிலம் நெல் வெளியீட்டில் 36.6 விழுக்காடு பங்களிப்பை வைத்திருக்கின்றது.

இந்நிலையில் விவசாய கணக்கெடுப்பானது இட தகவல், விவசாய உற்பத்தி, தோட்ட பரப்பளவு (நெல் வயல்), அதன் பயன்பாடு, நில உரிமை போன்ற அம்சங்களின் அடிப்படை தகவல்களை சேகரித்து வழங்குகின்றது.

சுருங்கச் சொன்னால் இந்த விவசாய கணக்கெடுப்புத் தரவுகளைக் கொண்டு உணவு உத்தரவாதம், உற்பத்திகளை அதிகரிக்கவும் சீரான விவசாயத்தை விளம்பரப்படுத்துவதற்கும் தேவைப்படும் குறுகிய – நெடுங்கால திட்டங்களையும் கொள்கைகளையும் வரையறுக்க முடியும்.

2024 விவசாய கணக்கெடுப்பானது தேசிய நெல் (அரிசி) நிலைத்தன்மையை அளந்து உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு இறக்குமதியை எதிர்பார்த்து காத்திருப்பதைக் குறைக்கவும் உதவும் என கெடா மாநில புள்ளிவிவரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, மலேசிய புள்ளிவிவரத்துறை கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் இந்த விவசாய கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகின்றது. இந்த கணக்கெடுப்பில் நடவு உற்பத்தி மட்டுமன்றி கால்நடை வளர்ப்பு, மீன்வளம், வனம் சார்ந்த நடவடிக்கைகளும் அடங்கும்.

அவ்வகையில் கெடா மாநிலத்தில் இவ்வாண்டு மொத்தமாக 672.2 ஆயிரம் குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் விவசாய நடவடிக்கை சம்பந்தப்பட்ட 81.780 குடியிருப்புகளிலும் கணக்கெடுக்கப்படும்.

இச்சூழலில் 2024இல் விவசாய கணக்கெடுப்பு, விவசாய வளர்ச்சிக்கான திறவுகோல் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த 2024 விவசாய கணக்கெடுப்பு குறித்து மேல்விவரங்களுக்கு https://www.myagricensus.gov.my/ என்ற அகப்பக்கத்தை நாடலாம்.

தொடர்ந்து மலேசிய அரசாங்கம் அக்டோபர் 20ஆம் தேதியை தேசிய புள்ளி விவரத் தினமாக அறிவித்துள்ளது என அவ்வறிக்கையில் தகவல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here